×

முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தன் எக்ஸ் தள பதிவில், “வக்பு வாரிய திருத்த மசோதா நாட்டிலுள்ள சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது . இந்த மசோதாவுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மக்களவையில் இரவு நேரத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் இது தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டது என்பதை அனைவரும் உணர முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் தள பதிவில், “இந்திய அரசியலமைப்பில் உள்ள கொள்கைகள், விதிகள் மற்றும் நடைமுறைகள் மீதான மோடி அரசாங்கத்தின் அனைத்து தாக்குதல்களையும் காங்கிரஸ் நம்பிக்கையுடன் தொடர்ந்து எதிர்க்கிறது. தொடர்ந்து எதிர்கொண்டு போராடுவோம்” என தெரிவித்துள்ளார். மேலும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் முகமது ஜாவேத் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பிற மத அறக்கட்டளைகளின் நிர்வாகத்துக்கு இல்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

The post முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Congress ,Supreme Court ,New Delhi ,President ,Mallikarjuna Karke ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...