விக்கிரவாண்டி, ஏப். 4: விக்கிரவாண்டியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (60). இவர் கடந்த மாதம் பக்கத்து தெருவில் புது வீடு கட்டி குடியேறி அங்கு வசித்து வருகிறார். பழைய வீட்டை வாரம் ஒரு முறை வந்து பார்த்து செல்வார். இந்த நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ மற்றும் கட்டில் டிராக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1500 ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த விக்கிரவாண்டி போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து மோப்பநாய் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரை சென்று நின்றது.
மேற்கொண்டு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த மாதம் 15ம் தேதி இதே தெருவில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போயிருந்தது. அதேபோல் பிப்ரவரி 26ம் தேதி விக்கிரவாண்டி பனையபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடு போனது. இதேபோல் விக்கிரவாண்டி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள், வழிப்பறி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் விக்கிரவாண்டி உஸ்மான் நகர் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி- புதுச்சேரி எல்லையில் மதுபாட்டில் கடத்தல் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க விழுப்புரம் மாவட்ட எஸ்பி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், இரவு நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விக்கிரவாண்டியில் துணிகரம் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.
