×

உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவருக்கு மணிமண்டபம் சென்னையில் காரல் மார்க்ஸுக்கு உருவச்சிலை அமைக்கப்படும்: 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன்கீழ் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவது அறிவிப்பு; உலக மாமேதை காரல் மார்க்ஸை பெருமைப்படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது. உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமை தத்துவத்தை வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ்.

இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர். அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர். வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்கு தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் காரல் மார்க்ஸ். உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான்.

இந்தியாவைப் பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக இந்தியாவைப் பற்றி எழுதியவர் அவர்தான். ‘‘இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்” என்று எழுதியவர் காரல் மார்க்ஸ்.
அதனால்தான் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து 1931ம் ஆண்டே வெளியிட்டார் தந்தை பெரியார்.

அத்தகைய மாமேதை மார்க்ஸ் உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது என்று கருதுகிறேன். அடுத்து, இரண்டாவது அறிவிப்பு; அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும் உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையாதேவருக்கு நாளை 103வது பிறந்தநாள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1923ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் நாள் அவர் பிறந்தார். இளம் வயதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையைப் பெற்று பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 1952ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடியவர் மூக்கையா தேவர்.

1971ம் ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றவர்.1967ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்தபோது பேரறிஞர் அண்ணாவுக்கு தோள் கொடுத்தவர் பி.கே.மூக்கையாத் தேவர். அப்போது இந்த பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவராக இருந்த அவர்தான் அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவரும் அவர்தான். தேவர் சமுதாய மக்களுக்காக கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணாவிடம் கோரிக்கை வைத்தவரும் அவர்.

அதனால்தான் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் கழக ஆட்சியில் அப்போது அமைக்கப்பட்டன. ’நியாயத்துக்கு ஒரு மூக்கையா’ என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றப்பட்ட பி.கே.மூக்கையாதேவரை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த 2 அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் எம்எல்ஏக்கள் பேசினர்.

 

The post உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாதேவருக்கு மணிமண்டபம் சென்னையில் காரல் மார்க்ஸுக்கு உருவச்சிலை அமைக்கப்படும்: 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karl Marx ,Chennai ,P.K. Mookaiyadeva ,Usilampatti ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Nadu Legislative Assembly ,Legislative Assembly ,P.K. Mookaiyadeva… ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...