ராமநாதபுரம்/சிவகங்கை, ஏப். 3: அக்னி நட்சத்திரம் போல், அதிகப்படியாக வெயில் அடிப்பதால் கோடை மழை தொடங்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். மார்ச் முதல் ஜூன் வரை வெயில் இருந்தாலும் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமே கடுமையான வெயில் இருக்கும். இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே கடுமையான வெயில் அடிக்க தொடங்கியது. மார்ச் மாதத்தில் தொடர்ந்த கடும் வெயில் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. கடுமையான வெயில் அடிக்கக் கூடிய அக்னி நட்சத்திர காலம் மே மாதத்தில் வரவுள்ள நிலையில் தற்போதே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்னி நட்சத்திர காலத்தில் 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால் அதே அளவிலான வெப்பத்தின் தாக்கம் தற்போது உள்ளது. தற்போது மாவட்டத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் கோடை மழை தொடங்குமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மார்ச் மாதம் சில நாட்கள் சாரல் மழை பெய்தது. கன மழை இல்லை. இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்க கோடை மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது, ‘‘முன்பு நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழை நீர் கோடை காலம் வரை இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் தெரியாது. தற்போது கோடை மழையும் இல்லாமல் பருவமழையும் காலம் தவறுவதால் வெப்பம் அதிகமாக தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் கோடை மழை இருக்கும். தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கோடை மழை கன மழையாக பெய்தால் வெயிலை சமாளிக்க உதவியாக இருக்கும். மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்’’ என்றனர்.
The post கொளுத்தும் வெயிலை சமாளிக்க அதிகளவில் கோடை மழை பெய்யுமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள், பொதுமக்கள் appeared first on Dinakaran.
