×

கொதிக்கும் கோடையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர்கள் டிப்ஸ்

பழநி, ஏப். 3: கோடை காலத்தில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிக்கும் வழிமுறை குறித்து பழநி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர்.உதயகுமார் கூறியதாவது,
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் முதல் வாரம் வரையில் கோடை காலமாக கருதப்படும். இந்நேரத்தில் வெயில் சுட்டெரிக்க துவங்கும். இதன் காரணமாக மக்கள் வெளியில் அலைய முடியாமலும், பல்வேறு நோய் தொந்தரவுகளுக்கும் உள்ளாக நேரிடுகிறது.

இதிலிருந்து தப்பும் முறைகள் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
இக்காலங்களில் வெப்பம் அதிகரிப்பதால் வியர்ப்பது அதிகளவு இருக்கும். அதனால் நீர்த்தேவை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் ஓடும் ரத்தம், நீர் ஆகியவை தோல் பகுதியிலேயே அதிகளவு பரவும். எனவே, நீர்ப்பற்றாக்குறை அதிகரிப்பதால் சிறுநீர் கடுப்பு, நீர்த்தரை கிருமி ஏற்படுகிறது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் அதிகமாகிறது. அதிக வெப்பதால் உணவுக்குழாயில் பாக்டீரியா தாக்கம் அதிகமாகிறது. சிறுநீரக மண்டலமும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.

மாங்காய், மாம்பழம் போன்ற காலநேர உணவு வகைகளில் உஷ்ணம் அதிகம் உண்டாகிறது. இதனால் வயிற்று கோளாறு பாதிப்பு அதிகமாகிறது. மேலும் கடும் வெயிலின் காரணமாக சருமத்தில் ஏற்படும் அழுக்கு, பிசுபிசுப்பு ஆகியவற்றால் சரும நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் இக்காலங்களில் தேமல், படை, சொறி, சிரங்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து தப்பிக்க ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குளிக்க வேண்டும். உள்ளாடை போன்றவற்றை பருத்தியில் அணிய வேண்டும். தண்ணீர் சத்து குறையாமல் இருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

நீர்ச்சத்து மிகுந்த சுரைக்காய்கள், பீர்க்கங்காய்கள், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மிதமான, எளிய உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும். குளிர்பானங்களை தவிர்த்து நீர் மோர், எலுமிச்சை சாறு போன்றவற்றை பருகலாம். நீர்ச்சத்து மிகுந்த பழங்கள், கீரை போன்றவற்றை அதிகம் பயன்படுத்தலாம். ஏ.சி. பயன்படுத்துவதை குறைத்து விட்டு இயற்கையான காற்று கிடைக்க காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

இக்காலங்களில் அம்மை நோய் தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் நினைவிழக்கும் சூழ்நிலை கூட ஏற்படுமென்பதால் வெயிலில் அலைவதை முடிந்தவரை குறைத்து கொள்வது நல்லது. இவ்வாறு கூறினர்.

The post கொதிக்கும் கோடையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர்கள் டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Palani ,Dr. ,Udayakumar ,Palani Government Hospital ,Tamil Nadu ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை