தஞ்சாவூர், ஏப்3: தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் குறுகிய கால உண்டு, உறைவிட பயிற்சியினை நேற்ற கலெக்டர் தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக வளாகத்தில், தஞ்சாவூர் நிர்வாகம் சார்பில் பள்ளி கல்வித் துறை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் இணைந்து நடத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் குறுகிய கால உண்டு, உறைவிட பயிற்சி துவக்க விழா கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த 430 மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையால் வழங்கப்படும் நீட் குறுகிய கால பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சார்ந்த 100 மாணவர்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் மிட் டவுன் மூலம் சி அகாடமியில் கட்டணமில்லா உண்டு உறைவிட பயிற்சி இன்று முதல் நடைபெறுகிறது. நீட் குறுகிய கால பயிற்சியை திறம்பட மேற்கொள்ளும் பொருட்டு மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வில் தகுதி பெறுவதற்கான பயிற்சிக்கு தேவையான கையேடுகளை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ்குமார், தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவக்குமார், ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் வினோத், ஜேக்கப், மாதவன், மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் குறுகிய கால உண்டு உறைவிட பயிற்சி வகுப்புகள் appeared first on Dinakaran.
