
பரமக்குடி: அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என பாஜ நிர்வாகி சார்பில் பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே மோதலால் கூட்டணி உருவாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அண்ணாமலையை மாநில பாஜ தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய தலைவரை தேர்ந்தெடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜ தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்து வந்தனர். இந்நிலையில், அண்ணாமலையை நீக்கிவிட்டு மாநில பாஜவிற்கு புதிய தலைவரை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாஜ மாவட்ட நிர்வாகி சார்பில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘வேண்டும்; வேண்டும்; அண்ணாமலை மீண்டும் தலைவராக வேண்டும். வேண்டாம், வேண்டாம் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம். ராமநாதபுரம் மாவட்ட பாஜ செயலாளர் லயன் கே.சரவணன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்… பரமக்குடி பகுதியில் பாஜவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு appeared first on Dinakaran.
