×

புதுவை மாநிலத்தில் பைக்குகள் திருடிய சென்னை சிறுவன் உள்பட 3 பேர் கைது

 

பாகூர், ஏப். 2: புதுவை மாநிலம் பாகூர் குருவிநத்தம் பெரியார் நகர் சந்திப்பில் நேற்று அதிகாலை பாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் மூன்று வாலிபர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர். இதனை கண்ட ரோந்து பணி போலீசார், அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர். இதனால் போலீசார் அவர்களை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். போலீசார் பின்னால் வருவதை கண்ட அந்த வாலிபர்கள், மோட்டார் சைக்கிள்களை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதரில் மறைந்து கொண்டனர்.

இது குறித்து ரோந்து பணி போலீசார், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பாகூர் போலீசார் சென்று புதருக்குள் மறைந்திருந்த வாலிபர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், வேலூர் மாவட்டம் சுப்பையா தெருவை சேர்ந்த ரமேஷ் (24), சென்னை திருவள்ளூர் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த திருமலை (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வந்து விடுதியில் தங்கி புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து உள்ளனர்.

பின்னர் கடற்கரை பகுதியில் ஒரு பைக்கை திருடி உள்ளனர். பின்னர் கரிக்கலாம்பாக்கம் மற்றும் பாகூர் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிக்கொண்டு குருவிநத்தம் பெரியார் நகர் வழியாக வந்த போது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து, அவர்களிமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதில் ரமேஷ், திருமலை ஆகியோர் மீது வேலூர், சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post புதுவை மாநிலத்தில் பைக்குகள் திருடிய சென்னை சிறுவன் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puducherry ,Bagur ,Guruvinatham Periyar Nagar junction ,Bagur, Puducherry ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை