×

வழிபாட்டு தலங்கள் சட்ட விவகாரம்; புதிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு

டெல்லி: வழிபாட்டு தலங்கள் சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1990ம் ஆண்டுகளின் துவக்கத்தில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்னை தீவிரமாக இருந்தது. ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அதன் மீது பாபர் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, 1991ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் தொடரப்பட்ட அஸ்வினி குமார் உட்பட சிலர் தொடர்ந்த ஆறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.

மேலும் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், 1991ன் அரசியலமைப்புச் சட்டத்தின் செல்லுபடியை கேள்விக்குட்படுத்தும் வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகள் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இந்த புதிய மனுவை ஏற்க முடியாது என்பது மட்டுமில்லாமல், நாங்கள் இதனை விசாரிக்கவும் விரும்பவில்லை’ என்று தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் நாங்கள் தாக்கல் செய்துள்ள மனுவின் சாராம்சம் என்பது முந்தைய மனுக்களின் கோரிக்கையை விட மாறானது’ என்று தெரிவித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘நாங்கள் முழுவதுமாக படித்து விட்டோம். மனுவில் எந்த வித்தியாசமும் கிடையாது. வேண்டுமானால் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். அதற்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம்’ எனக்கூறி புதிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post வழிபாட்டு தலங்கள் சட்ட விவகாரம்; புதிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Ramar temple ,Uttar Pradesh ,Ayodhya ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...