×

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது : ஐகோர்ட் கிளையில் தர்கா தரப்பு உறுதி

மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் கந்தூரி விழா நடத்த தடை கோரிய வழக்கில், அரசுத் தரப்பு, மனுதாரர் தரப்பு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் மாணிக்க மூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “வரும் 6ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில், ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்,” என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு, திருப்பரங்குன்றம் தர்காவில், ஏற்கனவே ஆடு ,கோழிகளை பலியிட தடை விதித்து நீதிபதிகள் அமர்வு, கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் முன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், இது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், எனவே, மலை உச்சியில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பு வாதிட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி, மனுதாரரின் மனு குறித்து சிக்கந்தர் தர்கா நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஆடு, கோழி பலியிடப்படாது; ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படும் என தர்கா தரப்பு உறுதி அளித்தது. மேலும் அரசு தரப்பு, “திருப்பரங்குன்றம் மலையில் கோழி, ஆடு பலியிடப்படவில்லை;
இஸ்லாமியர்களும் அதை செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல,”என தெரிவித்தது. இதனிடையே சந்தனக்கூடு கந்தூரி விழா என்று அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டு உள்ளது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆடு, கோழி பலியிடவே தடை விதிப்பு; கந்தூரி என்ற வார்த்தை பயன்படுத்தத் தடை இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு தொடர்பாக அரசு மற்றும் தர்கா தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.

Tags : Aycourt ,Madurai ,High Court Branch ,Kanduri ,Targa, Tiruparangundaram Mountain Peak ,Icourt Madurai branch ,
× RELATED பாஸ்டேக் பெறும் நடைமுறைகளை...