×

சபரிமலையில் பங்குனி ஆறாட்டு திருவிழா: இன்று மாலை நடை திறப்பு

திருவனந்தபுரம்: பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி ஆறாட்டு திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். இந்த வருட திருவிழா நாளை (2ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை (2ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடியேற்றத்திற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கும். காலை 9.45 மணிக்கும் 10.45 மணிக்கும் இடையே தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் திருவிழா கொடி ஏற்றப்படும்.

ஏப்ரல் 10ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் (11ம் தேதி) பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டும் நடைபெறும். அன்றுடன் 10 நாள் திருவிழா நிறைவடையும். வழக்கமாக திருவிழா முடியும் அன்று சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். ஆனால் இவ்வருடம் திருவிழாவை ஒட்டி சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோயில் நடை இன்று முதல் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும். ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷுவை முன்னிட்டு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். சித்திரை விஷு பூஜைகள் முடிந்த பின்னர் ஏப்ரல் 18ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.

பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. வரும் 18ம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். சித்திரை விஷு நாளன்று மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். இருமுடிக் கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

The post சபரிமலையில் பங்குனி ஆறாட்டு திருவிழா: இன்று மாலை நடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Panguni Araattu festival ,Sabarimala ,path ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Opening of the path ,
× RELATED மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்...