×

தமிழ்நாட்டை போல் துணிச்சல் வேண்டும்; மராத்தியில் பேச மறுத்தால் கன்னத்தில் பளாரென அறைவோம்: எம்.என்.எஸ்.கட்சி தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை: மராத்தியில் பேச மறுத்தால் கன்னத்தில் பளார் பளார் என்று அறைவோம் என எம்.என்.எஸ்.கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறினார்.

மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் எம்.என்.எஸ் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது:
எங்கள் மும்பையில் இருந்து கொண்டு மராத்தியில் பேச மாட்டோம் என்று கூறுகிறார்கள். அப்படி சொல்பவர்களின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைவோம். நாடு அது இது என்றெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். எல்லா மாநிலத்துக்கும் என்று ஒரு மொழி உள்ளது. அது மதிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை பாருங்கள். இந்தி வேண்டாம் என்று துணிச்சலுடன் தமிழ்நாடு சொல்கிறது. கேரளாவும் அப்படித்தான்.

மகாராஷ்டிரா மக்கள் சாதி அடிப்படையில் பிரிந்து நிற்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆட்சியாளர்கள் சாதியின் பெயரால் வேண்டும் என்றே பிளவை ஏற்படுத்துகிறார்கள். வரலாற்றை சாதி கண்ணோட்டத்துடனும் படிக்காதீர்கள். மராத்தியர்கள் ஒன்றுபடுவதை தடுக்க இவ்வாறு சாதி அடிப்படையில் வரலாற்றை குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறு மக்களை திசை திருப்பிவிட்டு அதானி போன்றர்களின் பணிகள் ரகசியமாக செய்து முடிக்கப்படுகின்றன. தொழில் அதிபர் அதானியை பாருங்கள். மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்கிறார். நவிமும்பை விமான நிலையத்தை கட்டுகிறார். தாராவி திட்டத்தையும் மேற்கொள்கிறார். நம்மைவிடவும் அதானி புத்திசாலித்தான்.
அவுரங்கசீப்பின் சமாதியை இடிக்க வேண்டும் என்கிறார்கள். இது தேவையில்லை. மராத்தாக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நினைவு சின்னங்களை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவுரங்கசீப்பை நாங்கள் புதைத்துவிட்டோம் என்பதை இன்று உலகமே புரிந்து கொண்டுள்ளது. திடீரென எல்லோருக்கும் அவுரங்கசீப் ஞாபகத்துக்கு வந்திருப்பது எப்படி? சினிமா படத்தை பார்த்துவிட்டு ஒரு இந்து விழித்தெழுந்தால் அதனால் பயன் இல்லை.

வாட்ஸ்ஆப்பில் சரித்திரத்தை படிக்க முடியாது. புத்தகத்தை படித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். 400 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு இன்று மோதலுக்கு காரணமாக இருக்கக் கூடாது. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசினார்.

The post தமிழ்நாட்டை போல் துணிச்சல் வேண்டும்; மராத்தியில் பேச மறுத்தால் கன்னத்தில் பளாரென அறைவோம்: எம்.என்.எஸ்.கட்சி தலைவர் ராஜ் தாக்கரே எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M. N. S. Party ,Raj Thackeray ,MUMBAI ,MARATHI ,MS. N. S. Party ,M. N. S Party ,
× RELATED கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி...