×

உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள்: செல்வப்பெருந்தகை!

சென்னை: உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்துச் செய்தியில்;

உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோரும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மக்களாலும் யுகாதி என்கிற தெலுங்கு புத்தாண்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வசந்த காலத்தின் முதல் நாளை யுகாதி என்ற பெயரில் புதுவருடமாக தெலுங்கு மக்களும், கன்னட மக்களும் இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர். வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த யுகாதி திருநாள் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெற்றுத் தரும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்நாளில் மக்கள் தங்களது வாழ்வில் புது முயற்சிகளையும், தொழில்களையும் தொடங்கி அதனால் ஏற்றம் பெறுகிறார்கள்.

தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு 2008 ஆம் ஆண்டில் செம்மொழி தகுதியை அளித்து பெருமைப்படுத்தியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டில் பல்வேறு மொழி, கலாச்சாரம் என்றிருந்தாலும், இந்தியர் என்ற சகோதர மனப்பான்மையோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து சாதி, மத துவேஷம் நீங்கி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு யுகாதி பண்டிகை வாழ்த்துக்கள்: செல்வப்பெருந்தகை! appeared first on Dinakaran.

Tags : YUKATHI FESTIVAL ,Chennai ,Tamil Nadu Congress Committee ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...