அரியலூர், மார்ச் 29: செந்துறை அருகே இலங்கைசேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டுவிழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களே பரிசுகள் வழங்கினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கை சேரி கிராமத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 42 மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
இங்கு தலைமை ஆசிரியராக வளர்மதி, உதவி ஆசிரியராக பொற்கொடி ஆகியோர் உள்ளனர். இங்கு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு இணையாக பேச்சுத் திறன், எழுத்துப் போட்டிகள் மொழி அறிவு போட்டிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்த பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அதிக அளவில் வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட அளவில் சவாலுக்கு தயாரான தொடக்கப் பள்ளியாக இலங்கைச்சேரி தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளை போன்று இந்த பள்ளியிலும் ஆண்டு விழாவை நடத்தினர்.
வெளி நபர்கள் உதவி இன்றி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புடன் சிறப்பான நடனம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த மாணவர்களின் பாடலுடன் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்களே பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதனைக் கண்ட பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். தன்னார்வத்துடன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்களை பாராட்டினர்.
The post செந்துறை அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.
