- கள்ளக்குறிச்சி
- கனியாமூர்
- நீதிபதி
- ரீனா
- கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை பிரிவு எண்.
- சின்னா சேலம்
- தின மலர்
கள்ளக்குறிச்சி, மார்ச் 29: கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2ல் கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏப்ரல் 24ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம்தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து அப்பள்ளி வளாகத்தில் அவருடைய மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்கள் மற்றும் போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பள்ளி வளாகத்தில் பொருட்களை சூறையாடி திருடியது, காவல்துறை வாகனத்திற்கு தீவைத்தது, பசுமாடுகளை துன்புறத்தியது, காவல்துறை உயர் அதிகாரிகள் உள்பட போலீசார் மீது கல்வீசி தாக்கியது என மொத்தம் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 4 வழக்குகளில் 53 சிறார்கள் உள்பட மொத்தம் 916 பேர் மீது 41 ஆயிரத்து 250 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தாக்கல் செய்தனர். இதில் காவல்துறை வாகனத்தை தீ வைத்து கொளுத்திய மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 124 பேரில் 3 பேர் சிறார்கள் மீதமுள்ள 121 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகவேண்டி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சம்மன் அனுப்பிவைத்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2ல் நீதிபதி ரீனா முன்னிலையில் 107 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். 14 பேர் பல்வேறு காரணங்களால் ஆஜர் ஆகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கை ஏப்ரல் 24ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டார். கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்குகளில் முதல் கட்டமாக காவல்துறை வாகனத்தை தீ வைத்து கொளுத்திய மற்றும் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்கிய வழக்கு விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
The post கனியாமூர் தனியார் பள்ளி கலவரத்தில் போலீஸ் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 107 பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் ஏப்ரல் 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
