×

போலி பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத தடை: சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: வகுப்புக்கு செல்லாமல் போலி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத தடை விதிக்கப்படுகிறது என்று சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக பல ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களை தயார்படுத்திக் கொள்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் சில மாணவர்கள், பிளஸ் 2 பாடங்களில் கவனம் செலுத்தாமல், நுழைவுத் தேர்வுக்கு தயாராவதில் மட்டுமே கவனம் செலுத்துவர்.

இதுபோன்ற மாணவர்கள் தினசரி வகுப்புகளுக்கு வராவிட்டாலும், நேரடியாக பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத சில தனியார் பள்ளிகள் அனுமதிக்கின்றன. இதுபோன்ற சில போலிப் பள்ளிகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. இதையடுத்து, தேர்வு விதிகளில் பல மாற்றங்களை சிபிஎஸ்இ செய்துள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பள்ளிக்கு தொடர்ச்சியாக வராத மாணவர்கள் அல்லது சி.பி.எஸ்.இ. வாரியத்தின் திடீர் சோதனையின் போது வகுப்பில் இல்லாத மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாணவர் தொடர்ச்சியாக வகுப்புகளுக்கு வருவது சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோரின் பொறுப்பாகும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 75 சதவீத வருகை பதிவு இருக்க வேண்டும். அவ்வாறு வருகைப் பதிவு இல்லாத மாணவர்கள் என்.ஐ.ஓ.எஸ். எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதலாம். அவசர மருத்துவ காரணங்கள், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு உள்ளிட்ட சில காரணங்களுக்கு, 25 சதவீத விலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இந்த விதிமுறைகள், 2025 – 26ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

 

The post போலி பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு எழுத தடை: சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CBSE ,New Delhi ,Central Board of Secondary Education ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?