×

இளநீர் கூடுகளை வீசினால் வாகனம் பறிமுதல்: பழநி நகராட்சி எச்சரிக்கை

 

பழநி, மார்ச் 28: இளநீர் கூடுகளை சாலைகளில் வீசினால் விற்பனை வாகனம் பறிமுதல் செய்யப்படும் யுவ பழநி நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தற்போது தீர்த்தக்காவடி பக்தர்கள் அதிகளவு வருகின்றனர். இவர்களிடம் வியாபாரம் செய்வதற்காக இளநீர் விற்பனை வாகனங்களும் அடிவார பகுதியில் அதிகளவில் நடமாடுகின்றன. சைக்கிள், டூவீலர் மற்றும் தள்ளுவண்டிகளில் வைத்து இளநீர் விற்பனை செய்யப்படுகின்றன. சில வியாபாரிகள் இளநீரை குடித்தவுடன் அதன் கூடுகளை ஆங்காங்கே வீசி விடுகின்றனர்.

இதனை உண்ண வரும் மாடு போன்ற விலங்குகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றன. தவிர, சாலைகளில் கிடக்கும் இளநீர் கூடுகளில் டூவீலர்கள் ஏறி பலர் கீழே விழுகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் பழநி நகராட்சி சார்பில் இளநீர் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாள்தோறும் மாலை 5 மணிக்கு பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பெரியப்பா நகரில் செயல்பட்டு வரும் உரக்கிடங்கிற்கு சென்று சேகரமாகும் கழிவுகளை கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக பதிவேடுகள் பராமரிக்கப்படும் என்றும், கழிவுகளை ஒப்படைக்காத இளநீர் விற்பனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post இளநீர் கூடுகளை வீசினால் வாகனம் பறிமுதல்: பழநி நகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Municipality ,Palani ,Palani Thandayutapani Swamy Temple ,Theerthakavadi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை