×

உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் உள்பட அடாவடி செய்த 4 கவுன்சிலர்கள் பதவி நீக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

சென்னை: உசிலம்பட்டி நகர் மன்ற தலைவர் உட்பட அடாவடி செய்த 4 கவுன்சிலர்களை பதவிநீக்கம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், அதாவது மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவை 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பான 1998ம் ஆண்டு சட்டத்தின் வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படும் மேயர்கள், துணை மேயர்கள், மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அச்சட்டம் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்நிலையில், 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் வகைமுறைகளை மீறி செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பிரதிநிதிகள் மீது அரசு, அச்சட்டத்தின் பிரிவு 52ன் கீழ் உரிய நடைமுறைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அவரவர் வகித்துவந்த பதவியிலிருந்து நீக்கம் செய்து ஆணையிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு உறுப்பினர் வ.பாபு, 5வது வார்டு உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சியின் மண்டலக்குழு தலைவரும், 40வது வார்டு உறுப்பினருமான ச.ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகர்மன்ற தலைவரும், 11 வது வார்டு உறுப்பினருமான க.சகுந்தலா ஆகிய 4 பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 4 பேர் மீதும் ஏராளமான புகார்கள் எழுந்தன. அவர்கள் அடாவடியாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் புகார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, அடாவடி கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உசிலம்பட்டி நகராட்சி மன்றத் தலைவர் உட்பட அதிரடியாக 4 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post உசிலம்பட்டி நகர் மன்றத் தலைவர் உள்பட அடாவடி செய்த 4 கவுன்சிலர்கள் பதவி நீக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Usilampatti Municipal Council ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Municipal Administration Department ,Dinakaran ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி