×

ஏப்ரல் 7ம் தேதி தேரோட்டம்; திருவாரூர் கோயிலில் ஆழித்தேர் அலங்காரம் மும்முரம்

திருவாரூர்: திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற தலமாக விளங்கி வருகிறது. கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழாக்களில் பங்குனி உத்திர பெருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டமும், கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறும்.

அதன்படி தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. மேலும் மஹாத்துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த 15ம் தேதி நடந்தது. கடந்த 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சுவாமிகளின் வீதியுலா, 22 முதல் 24ம் தேதி வரை நந்திகேஸ்வரர், சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளின் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலபைரவர் வீதியுலா, நேற்றிரவு காட்சி கொடுத்தநாயனார் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (27ம் தேதி) முதல் 31ம் தேதி வரை சந்திரசேகர சுவாமி வீதியுலா நடக்கிறது.

ஏப்ரல் 1ம் தேதி தியாகராஜ சுவாமிக்கு வசந்த பெருவிழா மற்றும் என்திசை கொடியேற்ற திருவிழா நடக்கிறது. 6ம் தேதி இரவு 8 மணியளவில் தியாகராஜ சுவாமி ஆழித்தேரில் எழுந்தளும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி காலை ஆழித்தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி பிரமாண்ட தேர் அலங்கரிக்கும் பணி கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது. ஆழித்தேரில் பொருத்துவதற்காக மரக்குதிரைகள் மற்றும் ரிஷபம், யாளம், பாம்பு யாளம், பிர்மா, துவாரபாலகர், கமாய் கால், மேல் கிராதி, கீழ் கிராதி, பெரிய கத்தி கேடயம், பூக்குடம், ராஜாராணி, கிழவன் கிழவி, சுருட்டி, இலை, பின்பக்கம் காமாய் கால், அம்பராத்தோணி என மொத்தம் 68 வகையான பொம்மைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

சாதாரணமாக 30 அடி உயரம், 30 அடி அகலம் கொண்ட இந்த தேர், 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும். தேரோட்டத்தின்போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரையில் 48 அடி உயரத்துக்கு கட்டுமான பணி, அதன்மேல் 12 அடி உயரத்துக்கு சிகரம், அதற்கும்மேல் 6 அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். 300 டன் எடையுடன் முன்பகுதியில் 33 அடி நீளம், 11 அடி உயரம் கொண்ட கம்பீரமான 4 மரக்குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். இவ்வளவு பிரமாண்டமான ஆழித்தேர் நகரின் 4 வீதிகளையும் ஆடி அசைந்தாடியபடி ஆரூரா தியாகேசா என்ற லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க நகர்ந்து செல்வது கண்கொள்ளா காட்சியாகும்.

The post ஏப்ரல் 7ம் தேதி தேரோட்டம்; திருவாரூர் கோயிலில் ஆழித்தேர் அலங்காரம் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur temple ,Tiruvarur ,Thiagaraja Swamy Temple ,Saiva ,Therotam ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...