×

தேனி எஸ்பி அலுவலகத்தில் ரூ.49 லட்சத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை

தேனி, மார்ச் 27: தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நவீன கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோர் திறந்து வைத்தனர். தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் நவீனமயமாக்கப்பட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறை திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி சிவபிரசாத் தலைமை வகித்தார். இதில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங், கலந்துகொண்டு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு எல்லை சோதனைச் சாவடிகளில் 14 ஏஎன்பிஆர் கேமராக்கள் மற்றும் 14 ஐபி சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சிசிடிவி கேமிரா ஒளிப்பதிவு, நேரடியாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் குற்றத்தடுப்பு மற்றும் குற்ற விசாரணைக்கு உதவுவதுடன் சோதனை சாவடிகளை சிறப்பாக நிர்வகிக்கவும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்லும் வாகனங்களை கண்டுபிடிக்கவும், சட்டவிரோத கனிம வள திருட்டு, மற்றும் கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும் முடியும்.சோதனைசாவடிகளில் கணினி திரைகள், தேவையான உபகரணங்கள், மேலும் மின்சார தடை ஏற்பட்டாலும் தொடர்ந்து ஆறு மணிநேரம் இயங்கும் வகையில் மின்சேமிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் பின்னோக்கி பார்க்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக இரண்டு வரூடங்களுக்கு இன்டெர்நெட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு மொத்தம் ரூ.49 லட்சம் திட்டச்செலவளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏடிஎஸ்பிக்கள் சுகுமார், ஜெரால்டு அலெக்சாண்டர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

The post தேனி எஸ்பி அலுவலகத்தில் ரூ.49 லட்சத்தில் நவீன கட்டுப்பாட்டு அறை appeared first on Dinakaran.

Tags : Theni SP ,Theni ,SP ,Theni District SP ,Theni District Police SP ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை