×

திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் : அமைச்சர் சேகர்பாபு பதிலுரை!!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (26.03.2025) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ச. சிவக்குமார் ஆகியோர் திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, இராமேஸ்வரம் ஆகிய 4 திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆற்றிய பதிலுரை.

“உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்களும், உறுப்பினர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களும், உறுப்பினர் திரு. ச.சிவகுமார் அவர்களும் சிறப்புக் கவன ஈர்ப்பினை கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கு விரிவாகத்தான் பதில் சொல்ல வேண்டும். அவர்களுடைய கேள்வியின் அடிப்படையே தவறானதாக இருக்கிறது.

இது விபத்து அல்ல. உயிரிழப்பிற்கு 2 கூறுகள் இருக்கின்றன. ஒன்று விபத்தினால் ஏற்படுகின்ற உயிரிழப்பு, மற்றொன்று, உடல்நலக் குறைவினால் ஏற்படுகின்ற உயிரிழப்பு. இந்த உயிரிழப்பைப் பொறுத்தவரை, உறுப்பினர்கள் 3 பேரும் அவை அலுவல்கள் முடிந்தவுடன், பேரவைத் தலைவர் அவர்களின் அறைக்கு வந்தால், அந்த உயிரிழப்பிற்கான காரணத்தை, மூன்றாவது கண் என்று போற்றப்படுகின்ற கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் அவர்களுக்குக் காண்பிக்க கடமைப்பட்டிருக்கின்றேன். ஆகவே, திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, இராமேஸ்வரம் ஆகிய 4 திருக்கோயில்களிலும் ஏற்பட்ட உயிரிழப்புகள் என்பது விபத்தின் காரணமாக அல்ல. உடல்நலக் குறைவின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள்தான்.

அதோடு மட்டுமல்லாமல், இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுருக்கமாக இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவரக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகுதான், அதிகமாக கூட்டம் கூடுகின்ற திருக்கோயில்களில், மருத்துவ வசதி தேவை என்பதை உணர்ந்து, இரண்டே இரண்டு திருக்கோயில்களில் இருந்த மருத்துவ வசதியை, 17 திருக்கோயில்களில் ஏற்படுத்தித் தந்த அரசு தமிழக முதல்வர் அவர்களின் அரசு.

ஒரு சிறிய உதாரணம். நான் பெயரைக் குறிப்பிட்டுக் கூற விரும்பவில்லை. 2023 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று அபிஷேகத்தில் பங்கேற்று இருந்தோம். என்னுடன் அமைச்சர் அண்ணன் திரு.எ.வ.வேலு அவர்களின் புதல்வனும் இருந்தார். ஒரு நீதிபதி அவர்கள் உடல்நலக்குறைவால் மயக்க நிலைக்கு சென்று விட்டார். அந்த நீதிபதி அவர்களுக்கு உடனடியாக சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட திருவண்ணாமலை திருக்கோயில் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் தான் அன்றைக்கு அந்த நீதிபதி உயிரை காப்பாற்றினார்கள். முக்கிய திருக்கோயில்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள 17 மருத்துவ மையங்களில் இதுவரையில் 7,16,187 நபர்கள் இதுவரையில் சிகிச்சை பெற்று இருக்கின்றார்கள் என்பதை இந்த அவையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

தமிழக முதல்வர் அவர்கள் திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்ற காலத்தில், வெகுதொலைவில் இருந்து வருபவர்களுக்கு உணவிற்கு என்ன செய்வார்கள் என்று சிந்தித்து, 2 திருக்கோயில்களில் செயல்பாட்டில் இருந்த முழுநேர அன்னதானத் திட்டத்தை 11 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தினார். அன்னதானத் திட்டத்தால் ஆண்டுக்கு மூன்றரை கோடி பக்தர்கள் இறைப்பசியோடு சேர்ந்து வயிற்று பசியையும் போக்குகின்ற தமிழகத்தின் வள்ளலார் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டத்திற்கு ஆகின்ற செலவு ஆண்டிற்கு ரூ.120 கோடியாகும்.

திராவிட மாடல் ஆட்சியில் வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்த வயது முதிர்ந்தவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் இறைவனை நினைத்து பக்தியோடு இறை நம்பிக்கையோடு இன்றைக்கு திருக்கோயிலை நோக்கி வருகை தருகின்றார்கள். திருக்கோயில்களில் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ததன் காரணமாக ஏற்கனவே வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை விட இன்றைக்கு 25 சதவீத மக்கள் கூடுதலாக திருக்கோயில்களுக்கு வருகை தந்து தரிசனம் செய்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது என்றால் தமிழக முதல்வர் அவர்கள் எடுத்த பெரும் முயற்சியில் தான்.

திருக்கோயில்களில் விருந்து மண்டபங்கள், முடிகாணிக்கை மண்டபங்கள், இளைப்பாறும் மண்டபங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதிகள் போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்ததன் காரணமாகத்தான் இன்றைக்கு திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுடைய எண்ணிக்கையும் கூடி இருக்கின்றது. அதோடு மட்டுமல்ல அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்ற திருக்கோயில்களை கண்டறிந்து அதற்கு பெருந்திட்ட வரைவு ஒன்றை ஏற்படுத்தினார். இது இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றிலே இல்லாத ஒரு புது முயற்சியாகும். 17 திருக்கோயில்களுக்கு 1,716 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவை இன்றைக்கு ஏற்படுத்தியதன் வாயிலாக, திருச்செந்தூர் திருக்கோயிலை 07.07.2025 அன்று குடமுழுக்கு முடிந்த பிறகு பார்த்தால் திருப்பதிக்கு இணையாக அந்த திருக்கோயிலை வடிவமைத்த பெருமை நம்முடைய தமிழக முதல்வர் அவர்களை சாரும்.

பழனிக்கு என் அருமை சகோதரி சென்று பாருங்கள். இன்றைக்கு திருப்பதிக்கு நிகராக அந்த பழனி திருக்கோயிலை வடிவமைத்து தந்திருக்கின்றார் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் முதலமைச்சர் அவர்கள். உறுப்பினர் அவர்கள் இந்த கேள்வியை எழுப்பும்போது எதிர்பார்த்தது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நிதியுதவி வழங்கப்படுமா என்று நீங்கள் கேட்பீர்கள் என்றுதான். நீங்கள் கேட்கவில்லை. ஆனால் எங்கள் முதல்வர் அவர்கள் நேற்றைக்கு முன்தினமே அவர்களுடைய சூழ்நிலையை அறிந்து உண்மையிலே அவர்கள் கோரிக்கை வைப்பார்கள் என்றால் அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் நிதியுதவி வழங்குங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கின்றார். ஆகவே அவர்களின் சூழ்நிலைக்கேற்ப கேட்ப நிதியுதவி வழங்கப்படும்.

வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வு கூட ஏற்படாமல், மனித உயிர் விலைமதிப்பற்றது என்பதை நன்றாக அறிந்த எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் வருகின்ற பக்தர்களின் உடல்நிலை மற்றும் நோயின் தன்மையை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டால் உடனடியாக முதலுதவியோ அல்லது தொடர் சிகிச்சையோ தேவைப்பட்டால் அதற்கும் ஏற்பாடு செய்ய சொல்லி உத்தரவிட்டிருக்கின்றார்.  வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறைய கூடுதல் கவனம் செலுத்தும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக கேள்வி எழுப்பிய மூன்று உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உறுப்பினர் திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் திருவண்ணாமலையின் கடந்த காலநிலை என்ன, தற்போதைய நிலை என்ன என்பதனையும் நன்றாக உணர்ந்தவர் என்பதையும் பேரவை தலைவர் வாயிலாக திரு.அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தெரிவித்து அமருகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post திருச்செந்தூர், தஞ்சாவூர், பழனி, ராமேஸ்வரம் திருக்கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் : அமைச்சர் சேகர்பாபு பதிலுரை!! appeared first on Dinakaran.

Tags : Tiruchendur, ,Thanjavur, ,Palani, Rameswaram temples ,Minister ,Sekarbabu ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Coimbatore ,South ,MLA ,Vanathi Srinivasan ,Polur ,Agri ,S.S. Krishnamoorthy ,Mayilam ,S. Sivakumar ,Palani ,Palani, ,Rameswaram temples ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...