×

இந்திய அரசின் நாட்காட்டியான பாரத் தமிழ் பதிப்பு நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சி பாதையையும் பிரதிபலிக்கிறது: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் நாட்காட்டியான ‘பாரத்-2026ன் தமிழ்பதிப்பை ஒன்றிய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன், சென்னையில் நேற்று நடந்த விழாவில் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த நாட்காட்டி இந்தியா 2047-ஐ நோக்கிய ஒரு செயல்திட்ட வழிகாட்டி. இது நாட்டின் முன்னேற்றத்தையும் எதிர்கால வளர்ச்சிப் பாதையையும் பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த நாட்காட்டியின் தமிழ்பதிப்பு வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

ஒன்றிய அரசின் முக்கிய திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சமூக-பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் வகையில் நாட்காட்டியின் ஒவ்வொரு மாதமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தற்சார்பு இந்தியாவை மையமாகக் கொண்டு, தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை வலியுறுத்துகிறது, பிப்ரவரி மாதம் விவசாயிகளின் மேம்பாட்டை எடுத்துக்காட்டி, இந்தியாவை உலகின் உணவுக் கிண்ணமாகச் சித்தரிக்கிறது.

மார்ச் மாதம் மகளிர் சக்தி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலை குறிக்கிறது. ஏப்ரல் மாதம் வரிச்சலுகைகள், சட்டங்களை எளிதாக்குதல், தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வசதிகள் மூலம் நடுத்தரப் பிரிவினரின் மேம்பாட்டையும், மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியையும் பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நினைவுகூர்கிறது.

ஜூன் மாதம் ஆயுஷ்மான் பாரத், மேம்படுத்தப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பு, பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. ஜூலை மாதம் பின்தங்கிய பிரிவினருக்கான சுகாதார வசதிகளைக் காட்சிப்படுத்துகிறது. ஆகஸ்ட் மாதம் இளைஞர் அதிகாரமளித்தலை எடுத்துக்காட்டி, தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் முக்கியப் பங்கை விளக்குகிறது.

செப்டம்பர் மாதம் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. இதில் விரைவு சக்தி, தொழில்துறை வழித்தடங்கள், நான்கு மற்றும் ஆறு வழி நெடுஞ்சாலை திட்டங்கள், விரைவுச் சாலைகள், விமான நிலையங்களின் விரைவான விரிவாக்கம், வந்தே பாரத் ரயில், புதிய பாம்பன் ரயில் பாலம் மற்றும் 2027ம் ஆண்டுக்குள் முன்மொழியப்பட்ட புல்லட் ரயில் திட்டம் போன்ற ரயில்வே மேம்பாடுகள் அடங்கும்.

அக்டோபர் மாதம் இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் அதைப் பாதுகாக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. நவம்பர் மாதம் தேசிய ஒற்றுமை, பழங்குடியினர் நலன், பிர்சா முண்டாவின் பாரம்பரியம் ஆகியவற்றை நினைவுகூர்கிறது. டிசம்பர் மாதம் வசுதைவ குடும்பகம் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் லட்சியங்களை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Indian government ,Union Minister ,L. Murugan ,Chennai ,Union Minister of State for Information and Broadcasting and Parliamentary Affairs ,India ,
× RELATED வேடசந்தூர் அருகே வேன் மோதி பாத...