×

கொடைரோடு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

நிலக்கோட்டை, மார்ச் 26:கொடைரோடு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த சாணை பிடிக்கும் தொழிலாளி பலியானார். கொடைரோடு அருகே ஜல்லிபட்டி பகுதியில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் ரயில் பாதையின் ஓரமுள்ள முட்புதரில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று அழுதிய நிலையில் கிடப்பதாக நேற்று ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து எஸ்ஐ கேசவன் தலைமையிலான போலீசார் மணிவண்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள கண்ணமங்கலத்தை சேர்ந்த அரிவாள், கத்திகளுக்கு சாணை பிடிக்கும் தொழிலாளி முருகன் (61) என்பதும், தற்போது மதுரை நிலையூரில் மனைவி, மகனுடன் வசித்து வந்தது தெரியவந்தது.
மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தொழிலுக்கு வெளியூர் செல்வதாக கூறி சென்று கிளம்பியவர் ரயிலில் செல்லும் போது தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொடைரோடு அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Kodairode ,Nilakottai ,Dindigul ,Madurai ,Jallipatti ,Kodairode… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை