×

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று துவங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் இன்று காலை துவங்கியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அதிகாலை 4 மணி முதல் மாலை வரை தொடர்ந்து 12 மணி நேரம் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனிடையே இந்த ஆண்டு குண்டம் திருவிழாவின் முதல் நிகழ்வாக இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோயிலில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்தனர். மேளதாளம் முழங்க ஆண் மற்றும் பெண் பக்தர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெப்பக்குளத்திற்கு சென்று தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. பின்னர் பண்ணாரி அம்மனிடம் பூ வரம் கேட்டு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை முதல் பண்ணாரி அம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிராமங்கள் தோறும் திருவீதி உலா நடைபெற உள்ளது. ஏப்ரல் 7, மற்றும் 8ம் தேதிகளில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெறுகிறது.

The post பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று துவங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Pannari Amman Kundam festival ,Sathyamangalam ,Sathyamangalam Pannari Amman Temple Kundam Festival ,Bannari Maryamman Temple ,Erode district ,Hindu Religious Institute Department ,Kundam ,Panguni ,Ikoil ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...