*இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை
வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் பூநாரைகள் வந்து உள்ளன. பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் நிலவும் குளிரைப் போக்குவதற்காக கோடியக்கரையில் வந்து தங்கி செல்லும் இந்த இடத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கவேண்டும் என அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் கடும் குளிரில் இருந்து தப்பிக்க, கோடியக்கரைக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்து வரும். இவ்வாறு ஆண்டு தோறும் 290 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவியதால் கோடியக்கரைக்கு, ஆர்டிக் பிரதேசம், ரஷ்யா, ஈரான், ஈராக், சைபிரியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, கரண்டி மூக்குநாரை, ஆலா, பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடற்காகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி சொந்த நாட்டுக்கு செல்ல துவங்கி உள்ளது.
கோடியக்கரையில் 20 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது ஈரபுல நில பகுதியான இங்கு கோடியக்கரை வனவிலங்கு சரணாலயமும் உள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட புள்ளிமான், வெளிமான், குதிரை, நரி, குரங்கு, பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயத்தை அரசு 1967ம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக அறிவித்தது. 2002 ஆம் ஆண்டு இந்த சரணாலயம் ராம்சார் சைட்டாக அறிவிக்கபட்டது.
பறவைகளின் நுழைவாயிலாக கருதப்படும் கோடிக்கரையை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் இடம், உணவு வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் பறவைகளின் அழகை ரசிப்பதற்கு படகு போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கோடியக்கரையை பறவை சரணாலயமாக அறிவிக்க வேண்டும் appeared first on Dinakaran.
