- சென்னை
- தமிழ்நாடு தேர்தல் அதிகாரி
- பிரதான தேர்தல் அதிகாரி
- அர்ச்சனா பட்நாயக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கும் விதமாக சென்னையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 3.11 கோடி ஆண் வாக்காளர்கள், 3.24 கோடி பெண் வாக்காளர்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஞானேஷ்குமார், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆலோசனைகளை பெற்று, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பான விவரங்களை இம்மாதம் இறுதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, வாக்காளர் பதிவு அதிகாரிகள் அவ்வப்போது கலந்துரையாடல் கூட்டங்களை நடத்துவதுடன், அவர்கள் வைக்கும் கோரிக்கைகளை சட்டத்திற்கு உட்பட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை 3 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இறந்தவர்கள் பெயர்களை நீக்காமல் இருப்பது உள்ளிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குச்சாவடிகள் அமைவிடம் தொடர்பான ஆட்சேபனைகள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
* தமிழ்நாட்டை பொறுத்தவரை
3.11 கோடி ஆண் வாக்காளர்கள், 3.24 கோடி பெண் வாக்காளர்கள், 9,120 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
The post தமிழக தேர்தல் அதிகாரி தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க திட்டம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய – மாநில கட்சிகளுக்கு அழைப்பு appeared first on Dinakaran.
