காட்டுமன்னார்கோவில், மார்ச் 22: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மா.கொளக்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன்- மணிமேகலை தம்பதியின் மகள் பூமிகா(24). இளங்கோவன் இறந்து விட்ட நிலையில் மணிமேகலை கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மகன் ஸ்டீபன்(26) என்பவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி என்பதால் ஸ்டீபனும், பூமிகாவும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் காதலாக மலர்ந்து 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பூமிகா கர்ப்பம் அடைந்தார். இதனையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதால் பூமிகா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்டீபனிடம் பல முறை வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு ஸ்டீபன் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், பூமிகா பலமுறை தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டபோது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பூமிகா, கேரளாவில் கூலி வேலை செய்து வரும் அவரது தாயாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் ஆறுதல் கூறி அவரை கேரளாவுக்கு அழைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி பூமிகா கேரளா சென்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், எனது சாவிற்கு ஸ்டீபன் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கேரளா போலீசாரிடம் புகார் அளித்து விட்டு. அங்கு உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உறவினர்கள் பூமிகா உடலை காட்டுமன்னார்கோவில் மா.கொளக்குடி கிராமத்திற்கு நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் உடல் அடக்கம் செய்ய முற்படும்போது ஊர் பொதுமக்கள், உறவினர்கள் பூமிகா சாவிற்கு நியாயம் கேட்டு, ஸ்டீபன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உடலை வைத்து சாலை மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சடலத்ைத எடுத்து சென்றனர்.
The post காதலித்து ஏமாற்றியதால் தற்கொலை இளம்பெண் சடலத்தை சாலையில் வைத்து போராட்டம் appeared first on Dinakaran.
