×

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,329 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.1,087 கோடி ஒதுக்கீடு: அரசு ஆணை

சென்னை: ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணை: 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், அவை தன்னிறைவு அடையும் நோக்கில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26ம் நிதியாண்டில் 2,329 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.1,087 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் ஊரக வளர்ச்சித்துறை ஆணையரின் கடித்தத்தில் 2025-26 நிதியாண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் முதலில் ரூ.1,091 கோடியில் 2,338 கிராம பஞ்சாயத்துகளில் பணிகள் மேற்கொள்ள முன்மொழியப்பட்டது. ஆனால் 43 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டது. இதையடுத்து திட்டத்தை 2,326 கிராமங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இத்திட்டம் மாநில அரசு நிதி ரூ.250 கோடி, மூலதன மானிய நிதி ரூ.480 கோடி, திட்டத்திற்கு திரட்டப்பட்ட வருவாய் ஒதுக்கீடு ரூ.250 கோடி,

உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு ரூ.107.33 கோடி என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.1087.33 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.  இந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,329 கிராமங்களில் 13,014 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.1087.33 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை கவனமாக பரிசீலித்த அரசு இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1,087.33 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக அனுமதி வழங்கியும், அதில் ரூ.500 கோடியை மாநில அரசு நிதியில் இருந்து விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 

The post அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,329 குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த ரூ.1,087 கோடி ஒதுக்கீடு: அரசு ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rural Development Secretary ,Gagandeep Singh Bedi ,Finance Minister ,Thangam Thennarasu ,Tamil Nadu ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...