×

முதல்வர் பிறந்தநாள் விழா தமிழகத்தில் திமுகவை தவிர யாரும் ஆட்சிக்கு வர முடியாது: நடிகர் விஜயகுமார் பேச்சு

சென்னை: தமிழகத்தில் இனி திமுகவை தவிர யாரும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் விஜயகுமார் பேசினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 29வது நிகழ்ச்சியாக ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் ‘‘எல்லோர்க்கும் பெய்யும் மழையானவர்! எப்போதும் மனதில் நிலையானவர்!’’ என்ற தலைப்பில் புகழரங்கம் நேற்று முன்தினம் நடந்தது.

சென்னை கிழக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வீரமணி தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். புகழரங்கத்தை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்தார். இதில், நடிகர் விஜயகுமார், கவிஞர் சினேகன், கல்யாணமாலை மீராநாகராஜன் மற்றும் பிக்பாஸ் வெற்றியாளர் முத்துக்குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

புகழரங்கத்தில் கவிஞர் சினேகன் பேசுகையில், ‘‘இன்றைய முதல்வர் என்றைக்கும் முதல்வராக இருக்க வேண்டும் என்று திராவிட இயக்கத்தை பத்திரமாக பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் கொண்டாடுகிறார்கள். திராவிட இயக்கம் ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் என்றவர்களுக்கு இந்த ஆட்சியில் தான் 2700க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
தொடர்ந்து, நடிகர் விஜயகுமார் பேசியதாவது:

நல்லதை நினைப்போம், நல்லதை செய்வோம் என்பவர் முதல்வர். தேர்தல் அறிக்கையில் சொன்னதையும் சொல்லாததையும் செய்கிறீர்கள். காலை உணவுத்திட்டத்தை சொல்வதா, மொழிக்காக நீங்கள் செய்ததை சொல்வதா, போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும். பொதுமக்களில் ஒருவராக சொல்கிறேன் நீங்கள் ஆட்சிக்கு வரபோவதில்லை எதிர்கட்சியாக கூட வரபோவதில்லை என்று கூறுபவர்களுக்கு நான் ஒன்றை கூறுகிறேன்.

தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான், திமுகவை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வரமுடியாது’’ என்றார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், மண்டல குழு தலைவர் சரிதா, லயன் உதயசங்கர், துலுக்காணம் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post முதல்வர் பிறந்தநாள் விழா தமிழகத்தில் திமுகவை தவிர யாரும் ஆட்சிக்கு வர முடியாது: நடிகர் விஜயகுமார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Vijayakumar ,Chennai ,Chennai East District DMK ,People's Chief Minister's Humanitarian Festival ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...