- அமைச்சர்
- I. பெரியசாமி
- சட்டப்பேரவை
- பவானி
- கே.சி. கருப்பண்ணன்
- அஇஅதிமுக
- கோவை தெற்கு…
- அமைச்சர் I. பெரியசாமி
- தின மலர்
சட்டப்பேரவையில் பவானி கே.சி.கருப்பண்ணன் (அதிமுக) ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பேசும்போது, “எனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தெருநாய் புகுந்து ஆடு, கோழிகளை கடித்து கொன்றுவிடுகிறது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.” என்றார்.
தொடர்ந்து பேசிய கோவை தெற்கு வானதி சீனிவாசன் (பாஜ) பேசும்போது, “தமிழகம் முழுவதும் தெருநாய், வெறிநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெருநாயை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், இச்சம்பவம் குறித்த விவரங்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்டு கவனமாக ஆய்வு செய்யப்பட்டன. அதனடிப்படையில், மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் விவசாய, கால்நடை விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள், நாய்கள் கடித்து உயிரிழக்கும் நிகழ்வுகளில் உரிய இழப்பீடு வழங்க பேரிடர் மேலாண்மை நிதியின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின்கீழ் இழப்பீடு வழங்கிட முதல்வர் நேற்று காலை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாய் கடித்து உயிரிழக்கும் மாடு ஒன்றுக்கு 37,500 ரூபாயும், வெள்ளாடு / செம்மறி ஆடு ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாயும், கோழி ஒன்றுக்கு 200 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும். இதுவரை உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு 42 லட்சத்து 2 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* திராவிட மாடல் ஆட்சிக்கு தமிழ் கடவுள் முருகப் பெருமான்
ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார்: திமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, திருத்தணி எஸ்.சந்திரன் (திமுக) பேசுகையில், ‘‘திருத்தணி தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அரசு மகளிர் கலைக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: நீதிமன்ற வழக்கினால் 6 கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் ஒரு சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அதன்படி, 6 கல்லூரிகளையும் இந்த ஆண்டிற்குள் தொடங்குவதற்கான சூழலை உருவாக்கிய பிறகு நிச்சயம் திருத்தணிக்கும் ஒரு கல்லூரி ஏற்படுத்தி தரப்படும்.
எஸ்.சந்திரன்: எனது தொகுதியை பொறுத்தவரையில் பள்ளிப்பட்டு, ராக்கிப்பட்டு உள்ளிட்ட வட்டங்கள் திருத்தணி 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாலும் கிராமப்புற மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அமைச்சர் இந்த அறிவிப்பினை அளித்திருக்கிறார். அறநிலையத்துறையின் சார்பில் பல்வேறு நல திட்டங்களை தமிழக முதல்வரின் தலைமையில் செயல்படுத்தக்கூடிய அமைச்சர், திருத்தணி முருகப்பெருமானின் ஆசியை முழுமையாக பெற்றிட அவருடைய இந்த அறிவிப்பு உதவி புரியும்.
அமைச்சர் சேகர்பாபு: உறுப்பினர் புத்திசாலித்தனமாக கோரிக்கையை நிறைவேற்ற முற்படுகின்றார். வரவேற்கிறேன். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6 கல்லூரிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு அவரது கோரிக்கையை பரிசீலித்து கல்லூரி ஏற்படுத்தப்படும் என்று தான் அறிவித்திருக்கின்றேன். அதோடு மட்டுமில்லாமல் முருகப்பெருமான் ஆசி முழுவதுமாக கிடைக்கும் என்று சொல்லியிருக்கின்றார். தமிழ் கடவுள் முருகனுக்கு மாநாடு எடுத்த ஒரு ஆட்சி உண்டென்றால் அது திராவிட மாடல் ஆட்சியாகும். ஆகவே முருகப்பெருமான், இந்த ஆட்சிக்கு முழுவதுமாக ஆசி வழங்கி கொண்டு இருக்கிறார்.
* திருத்தணி கோயிலுக்கு யானை வழங்க நடவடிக்கை
பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன்: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு யானை ஒன்று வழங்கிட அரசு முன்வருமா?.
அமைச்சர் சேகர்பாபு: அத்திருக்கோயிலுக்கு ஏற்கனவே 1981ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் சார்பில் ஒரு யானை வழங்கப்பட்டது. அந்த பெண் யானை வள்ளி 2010ம் ஆண்டு இறந்துவிட்டபடியால், அந்த யானைக்கு திருக்கோயிலில் மணிமண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. கிரிதரன் என்பவர் யானையை வாங்கி தானமாக வழங்கிட முன் வந்தார். இந்திய வனத்துறையின் சட்டம் 1972 -ன் படி யானை வாங்குவதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளையானது திருக்கோயிலுக்கு யானைகள் யாரும் வாங்க கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பிட அரசு செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றவுடன் அவர் கோரிய அந்த திருக்கோயிலுக்கு யானை நிச்சயமாக உபயதாரர்களால் வழங்கப்படும்.
The post நாய் கடித்து உயிரிழந்தால் இழப்பீடு…மாடுக்கு ரூ.37,500: ஆடு ஒன்றுக்கு ரூ.6,000; கோழிக்கு ரூ.200: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.
