×

ரம்ஜான் பண்டிகை எதிரொலி ஜவுளிச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு

*வியாபாரிகள் மகிழ்ச்சி

ஈரோடு : ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டிவிஎஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ். காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது.

மேலும், ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுகிறது. தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள்.

இந்த நிலையில், இந்த வார ஜவுளிச் சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது. கடந்த 3 வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வருகையால் மொத்த வியாபாரம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வாரம் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர்.

இதனால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மொத்த வியாபாரம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.அதே நேரம் ரம்ஜான் பண்டிகை மற்றும் தொடர் விசேஷங்கள், கோயில் திருவிழாக்கள் காரணமாக உள்ளூர் வியாபாரிகள் வருகையால் சில்லரை விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

இந்த வாரம் சுமார் 40% சில்லரை விற்பனை நடைபெற்றது. வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், காட்டன் ரக துணிகள் விற்பனையும் அதிக அளவில் நடைபெற்றது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ரம்ஜான் பண்டிகை எதிரொலி ஜவுளிச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramzan festival ,Erode ,Kani Market Textile Commercial Complex ,Erode Panneerselvam Park ,Manikkundu Road ,TVS. Road ,Easwaran Koil Road ,NMS. Compound ,Kamaraj Road ,Brinda Road… ,
× RELATED வீட்டின் முன்பு திரண்டிருந்த...