×

புதுச்சேரியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 15வது சட்டசபையின் 6வது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கைலாஷ்நாதன் உரையை வாசித்தார். இதையடுத்து, மாா்ச் 12ம் தேதி முதல்வா் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். மாா்ச் 11 மற்றும் 13ம் தேதிகளில் ஆளுநா் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கிய கூட்டத்தொடரில், கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தங்களின் தொகுதிகள் மற்றும் மாநில திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அரசும் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறது. இந்நிலையில், நெல்லித்தோப்பு சட்டப்பேரவை உறுப்பினர் ரிச்சர்ட், மாநில அரசு கொடுக்கும் இலவச அரிசியை பெரும்பாலான மக்கள் வாங்கவில்லை என கூறினார். இதற்கு பதில் அளித்த அம்மாநில முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்த ரேஷன் கடைகளை திறந்துள்ளோம். ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி கூறினார்.

The post புதுச்சேரியில் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Chief Minister ,Rangasamy ,6th Budget Meeting of the 15th Assembly ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...