×

பூத் வாரியாக ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷனுக்கு 10 நாள் கெடு: மனுதாரர்களுடன் ஆலோசிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிவடைந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குச் சாவடி வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களை அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தாக்கல் செய்த இரண்டு பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

​​தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன், ‘வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் முரண்பாடுகள் உள்ளன’ என்றார்.

மஹூவா மொய்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி கூறுகையில்,’ வாக்குப்பதிவு முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட 10 ஓட்டுகள், எப்படி மறுநாள் காலை 50 ஆனது என்பதை விளக்க வேண்டும்’ என்றார்.

தேர்தல்கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் கூறுகையில்,’ இப்போது புதிய தலைமை தேர்தல் கமிஷனர் பதவி ஏற்று இருக்கிறார். எனவே மனுதாரர்கள் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்’ என்றார்.

அப்போது தலைமை நீதிபதி,’ மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதுதெடர்பாக அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு தேர்தல் கமிஷன் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு ஜூலை 28ம் தேதி விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post பூத் வாரியாக ஓட்டுப்பதிவு தேர்தல் கமிஷனுக்கு 10 நாள் கெடு: மனுதாரர்களுடன் ஆலோசிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Supreme Court ,New Delhi ,Trinamool Congress ,Mahua Moitra ,Lok ,Sabha ,Assembly ,Ministry of Democratic Reforms… ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது