- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வா பெருந்தகை
- தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: தமிழ்நாடு அரசு விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தின்கீழ் தற்போது வரை ரூ.10,341 கோடி தள்ளுபடி செய்துள்ளது. வரும் நிதியாண்டில் ரூபாய் 1427 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் அளவு கடந்த ஆண்டு 1.83 லட்சம் கோடியாக இருந்தது, நடப்பாண்டில் 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதால் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பயறுவகைகள், நெல், பருத்தி, கரும்பு, பலா, தென்னை, பனை, முந்திரி, காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற அனைத்து பயிர்களுக்குமான திட்டங்கள் ஒரு நோக்கமாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான எந்த அறிவிப்பும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஓரிரு திட்டங்களைத் தவிர விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் வேளாண்பட்டதாரிகளுக்கும், உழவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் 1000 இடங்களில் உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்கப்படும்; ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பில் இந்த மையங்களை அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கோடை உழவுக்கான மானியத்தை குறைந்தது ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: சிறு தானிய இயக்கம், எண்ணெய் வித்துக்கள் இயக்கம் போன்றவைகளுடன் முந்திரி வாரியம் அமைத்திருப்பதும், மானாவாரி பகுதிகளில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு தலா ரூ.2000 மானியம் வழங்குவது, பண்ணைக் குட்டைகள் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்களும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவும். தமிழ்நாடு விவசாயிகள் மன நிறைவு கொள்ளும் வேளாண் பட்ஜெட்டாக அமைந்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு வரவேற்கிறது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழக அரசின் நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டானது உழவுத் தொழிலை மேம்படுத்தியதாக விளம்பரப்படுத்தி, தமிழக அரசை புகழ்ந்து, உழவர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது என்றார். இதே போல டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
The post ‘விவசாயிகள் மன நிறைவு கொள்ளும் பட்ஜெட்’ appeared first on Dinakaran.
