×

போலி கால்சென்டர் நடத்தி பல கோடி மோசடி செய்த வாலிபர் குண்டாசில் கைது

சென்னை: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஒழுந்தியாம்பட்டை சேர்ந்தவர் ராஜூ. தச்சு தொழிலாளியான இவரிடம் கடந்த ஆண்டு செல்போனில் பேசிய நபர், தனியார் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், கட்டணமின்றி குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ராஜூ தனது ஆதார், பான் கார்டு நகலை அனுப்பி வைத்தும் அந்த நபர் கடன் பெற தயாரிப்பு, ஜிஎஸ்டி, ஆவண கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியதை நம்பி பல்வேறு தவணைகளில் ரூ.8.20 லட்சம் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் கடன் தொகை பெற்று தரவில்லை. பின்னர்தான் நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த கோபிகிருருஷ்ணன் என்பவர் செஞ்சியில் நடத்தும் போலி கால்சென்டரிலிருந்து பேசி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று போலியான கால்சென்டர் வைத்து ஆன்லைன் கடன் பெற விரும்பும் நபர்களின் செல்போன் எண்களை சேகரித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்ததை கண்டறிந்தனர்.

தொடர்ந்து இவருக்கு உடந்தையாக இருந்த சென்னை அத்திப்பட்டு தினேஷ் (28), நெய்வேலி நடராஜன் (39), செஞ்சியில் கால்சென்டரில் ேமலாளராக பணியாற்றி வந்த அந்தோணி மனைவி வளர்மதி (36) ஆகியோரை போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து கார், செக்புக், 50 செல்போன்கள், சிம் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த கோபிகிருஷ்ணன் மீது ஏற்கனவே 10 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து இதுபோன்று மோசடியில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று அதற்கான உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் கோபிகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post போலி கால்சென்டர் நடத்தி பல கோடி மோசடி செய்த வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kundas ,Chennai ,Raju ,Ozhundhiambattu ,Vanur ,Villupuram district ,
× RELATED ரூ.6 கோடி போதை பொருள் கடத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி அதிரடி கைது