×

தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேச்சு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்: தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலால் பரபரப்பு

காஞ்சிபுரம்: நாடாளுமன்ற பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று கல்வி மீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்திற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை உடனே தரவேண்டும், மும்மொழி கொள்கையை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், தமிழ்நாட்டு எம்பிக்கள் ‘அநாகரிகமானவர்கள்’ என இழிவுப்படுத்தும் வகையில் பேசினார்.

இதற்கு திமுக எம்பிக்கள் அவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி ஒன்றிய அமைச்சரின் அநாகரிகமான பேச்சை உடனே அவையிலேயே கண்டித்தார். மேலும், தர்மேந்திர பிரதான் மீது மக்களவை விதி 223ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கினார். இதற்கிடையே ஒன்றிய அமைச்சரின் ‘நா’ தடித்த பேச்சுக்கு தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டு எம்பிக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதேநேரம், தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறாக பேசிய வரும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திமுகவினர் மாநிலம் முழுவதும் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களில் திமுகவினருடன் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

சென்னையில் தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்துரு, இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பெரவள்ளூர் சந்திப்பு பகுதியில் கொளத்தூர் பகுதி செயலாளர் நாகராஜ் தலைமையிலும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி அருகே பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டிசேகர் தலைமையிலும், திருவிக நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் பேருந்து நிலையம் பகுதியில் திருவிக நகர் மேற்கு பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையிலும், ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் பகுதி செயலாளர் சாமி கண்ணு தலைமையிலும் ஆரப்பாட்டம் நடத்தப்பட்டு உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

மேலும், சிந்தாதிரிப்பேட்டை, ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், ஆலந்தூர் பரங்கிமலை சுரங்கப்பாதை, பழவந்தாங்கல், பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடப்பத்தால் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டங்கள் அனைத்து அந்தந்த மாவட்ட மற்றும் ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் தலைமையில் நடந்தது. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவபொம்மையை போராட்டத்தின் பொது சாலையில் போட்டு தீவைத்து கொளுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீப்பிடித்து எரிந்த உருவ மொம்மையை தண்ணீர் ஊற்றி அனைத்தனர். ஆலந்தூர் வடக்கு, தெற்கு பகுதி திமுக, இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக நங்கநல்லூர், ஆலந்தூர் போன்ற பகுதிகளில் நேற்று மாலை நடந்து.

நங்கநல்லூர் ஆர்ப்பாட்டத்தை ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் தொடங்கி வைத்தார். ஆலந்தூர் பரங்கிமலை சுரங்கப்பாதை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன் தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் விக்னேஷ் பிரவீன் குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கலாநிதி குணாளன் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்து காலில் மிதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டசெயலாளர்கள் யேசுதாஸ், சாலமோன் ஜெ.நடராஜன், உலகநாதன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன், முரளி கிருஷ்ணன், சீனிவாசன் வழக்கறிஞர் சரவணா, பகுதி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல, மூலக்கடை சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் பகுதி செயலாளர்கள் துக்காராம், புழல் நாராயணன், தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், அருள்தாசன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒன்றியம் வாரியாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக கலந்து கொண்டதால் போராட்டம் நடந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில் தமிழக எம்பிக்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்து கண்டம் தெரிவித்தனர். இதில், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் சசிகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post தமிழக எம்பிக்களை அவமதிக்கும் வகையில் பேச்சு ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவப்பொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்: தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Dharmendra Pradhan ,DMK ,Tamil Nadu ,Kanchipuram ,DMK South Chennai ,Tamilachi Thangapandian ,
× RELATED ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம்6...