×

அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம்

சென்னை: இன்று (10.03.2025) சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ், வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலத்தில், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ.வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ச.அ.ராமன், வாரிய செயலாளர்கள், மண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், வட்டார தொழிலாளர் இணை ஆணையர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசானது, தொழிலாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காணும் நோக்கத்திலும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை அறிவித்து தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் தொழிலாளர் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். தொழிலாளர் துறை அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சர் வழங்கினார்.

* தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர்களை விரைவாக சென்று சேர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

* முதலமைச்சர் தலைமையிலான இவ்வரசு அமைப்புசாரா தொழிலாளர் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படும் அரசு. எனவே, தொழிலாளர் துறை அலுவலர்கள் அமைப்புசாரா வாரியங்களில் பெறப்படும் கேட்புமனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காணவும், நிலுவை ஏதுமின்றி செயல்படவும் அறிவுறுத்தினார். குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி மானியம் தொடர்பான கேட்பு மனுக்களின் மீது தனி கவனம் செலுத்தி சரியான விண்ணப்பங்களை கண்டறிந்து பயனாளிகளுக்கு பயன் கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தினார்.

* அமைப்புசாரா நல வாரியங்களில் பெறப்படும் பதிவு மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை நிலுவையின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும், GIG தொழிலாளர்களை அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக அதிக அளவில் பதிவு செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்திடுமாறு அறிவுறுத்தினார்.

* சமரச அலுவலர்கள் தமிழ்நாட்டில் தொழில் அமைதி நிலவும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையிலும், தொழிலாளர் மற்றும் வேலையளிப்போர் இடையே நல்லுறவினை மேம்படுத்தும் வகையிலும் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார்.

* தொழிலாளர் துறையின் செயல்பாடுகளான சமரசப் பணிகள், நீதிசார் பணிகள், சட்ட அமலாக்க பணிகள் போன்ற பணிகள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

* பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

* பல்வேறு தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

* அமலாக்க அலுவலர்கள் ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதனை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

* மேலும், ஆய்வின் போது வெளிமாநில தொழிலாளர்கள், தொழிலாளர் துறையின் வலைதளத்தில் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதனை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

மேற்கண்டவாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்தார்.

The post அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,C. ,Ganesan ,Chennai ,Chennai, ,Tenampettai ,T. M. ,Labour Commissioner's Office ,Tamil Nadu Labour Welfare Board ,Seminar Hall ,Ministry of Labour Welfare and Skills Development ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...