×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச்செயலகத்தில் பொங்கல் கொண்டாட்டம்: வேட்டி, சட்டை, புடவை அணிந்து பொங்கல் வைத்தனர்

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன் முறையாக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. தமிழர்களிள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் முதல்வர், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை நாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைவரும் தயாராகி வருகின்றனர்.

கல்லூரி, அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இன்றும் பல அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலகம், ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

பொங்கல் விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், தலைமை செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் வந்து கலந்து கொண்டனர். பெண்கள் புடவை அணிந்து கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பெண்களே புது மண்பானை வைத்து பொங்கல் செய்தனர். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஊழியர்கள், பெண் ஊழியர்கள் என அனைவருக்கும் பொங்கலை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நேரில் சென்று முதல்வர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், நாதஸ்வர இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் நாம் சமத்துவ பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு, நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது; இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், உழைத்துக் கொண்டிருக்கிறது. உழைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால், நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்துதான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் நீங்கள் எல்லோரும் நேரம், காலம் பார்க்காமல், உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களோடு, இந்த பொங்கலை கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும்! பொங்கட்டும்! என்று இந்த இனிய நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை, தலைமை செயலகத்தில் பொங்கல் சமைத்து, பொங்கல் விழா கொண்டாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பொங்கல் விழாவை முதல்வர் சிறப்புடன் அரசு அலுவலகங்களில் கொண்டாட உத்தரவிட்டிருந்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் முதல்வர் கலந்து கொண்டதுபோல, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

இதனால் அரசு அலுவலகங்கள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பல அலுவலகங்களில் மைக் செட் கட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி பரிசுகளை வழங்கினர். சுற்றுலா தளங்களிலும் அரசு சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழகமே பொங்கல் விழாவை நேற்று சிறப்புடன் நடத்தியது, எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வைத்துள்ளது.

Tags : Pongal ,Chief Minister ,M.K. Stalin ,Secretariat ,Chennai ,IAS ,Tamil Nadu… ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...