×

முந்தைய பாஜக ஆட்சியில் தங்கம் கடத்தலில் கைதான நடிகைக்கு 12 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு: கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு

பெங்களூரு: முந்தைய பாஜக ஆட்சியில் தங்கம் கடத்தலில் கைதான நடிகைக்கு 12 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் வெளியானதால் கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் (32) கடந்த சில தினங்களுக்கு முன் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த போது, 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கைது செய்ய‍ப்பட்டார். தற்போது அவர் போலீஸ் காவலில் இருக்கும் நிலையில், சிபிஐ தரப்பிலும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச கும்பலுடன் தங்கம் கடத்தலில் ரன்யா ராவ் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், இவரது பின்னணி குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சி காலத்தில், இரும்பு ஆலை அமைப்பதற்காக விதிமுறைகளை மீறி ரன்யா ராவுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் இதுகுறித்து கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரியம் விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து கர்நாடக தொழில்துறை பகுதி மேம்பாட்டு வாரிய வட்டாரங்கள் கூறுகையில், ‘நடிகை ரன்யா ராவ் ‘க்சிரோடா’ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். துமகுரு மாவட்டத்தில் அமைந்துள்ள சிரா தொழில்துறை பகுதியில் இரும்பு ஆலை அமைப்பதற்காக சுமார் 12 ஏக்கர் அரசு நிலமானது, கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி மேற்கண்ட நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. முந்தைய பாஜக தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த ஆலை அமைப்பதற்காக ரூ.138 கோடி முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டது.

இதன் மூலம் இப்பகுதியில் சுமார் 160 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின. இதுகுறித்து மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நில ஒதுக்கீடு செயல்முறையானது முந்தைய பாஜக ஆட்சியில் ெதாடங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, நிலம் ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. நிலம் ஒதுக்கீடு விசயத்தில் விதிமீறல்கள் இருக்கிறதா? என்பது குறித்து விசாரிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. இரும்பு ஆலைக்கு நில ஒதுக்கீடு, தங்கம் கடத்தல் தொடர்பான சர்ச்சைகளில் ரன்யா ராவ் சிக்கியுள்ளதால், அவர் தனது தந்தை (போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகள்) மூலம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளாரா? என்ற கேள்வியும் எழுகிறது.

The post முந்தைய பாஜக ஆட்சியில் தங்கம் கடத்தலில் கைதான நடிகைக்கு 12 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கீடு: கர்நாடக அரசியலில் திடீர் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Bengaluru ,Karnataka ,Ranya Rao ,Chikkamagaluru, Karnataka ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...