×

சனி பெயர்ச்சியா? குரு பெயர்ச்சியா? எந்த கிரக பெயர்ச்சிக்கும் பயம் வேண்டாம்!

அண்மையில் கடக ராசி அன்பர் ஒருவர் அடியேனைச் சந்தித்தார்.“சார், இன்னும் எத்தனை காலம் எனக்கு அஷ்டமச் சனி இருக்கிறது?’’ என்று கேட்டார். நான் கேட்டேன்,“ஏன் அஷ்டமச் சனி உங்களைப் பாடாய்ப் படுத்துகிறதா? மிகுந்த கஷ்டமா?’’ அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.“அஷ்டமச் சனி என்னைப் பாடாய் படுத்துகிறதோ, இல்லையோ, ஆனால் வார ராசி பலன்களில் ஒவ்வொரு முறையும் அஷ்டமச் சனி… அஷ்டமச் சனி.. என்று எழுதியதைப் படிக்கும் பொழுது, மனசு பாடாய்ப் படுகிறது” என்றார். நான் சொன்னேன்,“ஒன்றும் கவலைப்படாதீர்கள். இந்த ஆண்டு அஷ்டமச் சனி உங்களை விட்டு ஓடிப் போய் விடுகிறது. திருக்கணித்தபடி மார்ச் கடைசி சனிப்பெயர்ச்சி.’’“கோயில்களில் சனிப்பெயர்ச்சி?’’ (நண்பர்)“அது வாக்கியப்படி நடக்கும். இப்பொழுது மாசி மாதம் நடக்கிறது. அடுத்த மாசி மாதம் 22-ஆம் தேதி சனி, மீன ராசிக்கு சென்றுவிடுகின்றார். அதைப் போலவே வருகின்ற சித்திரை 28-ஆம் தேதி, குரு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகின்றார்’’ என்றேன். நான் ஒரு கேள்வி கேட்டேன்.

“உண்மையைச் சொல்லுங்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உங்கள் அஷ்டம ராசியில் சனி இருக்கின்றார். நீங்கள் பெரிய அபாயங்களையும் கஷ்டங்களையும் சந்தித்தீர்களா?’’ என்று கேட்டேன். அவர் பதில் சொன்னார்; “அப்படி பெரிய அளவில் ஒன்றும் கஷ்டங்கள் வரவில்லை. சாதாரண கஷ்டங்கள்தான் வந்தன’’ உண்மை அதுதான். கோச்சாரப் பலன்களை நாம் பூதாகரமாக நினைக்கிறோம். ஒரு ஜாதகத்தின் பலனை தீர்மானம் செய்வது கோள் சாரம் மட்டுமல்ல. அவர்களுக்கு நடக்கக்கூடிய தசாபுத்திகள்தான் 90% பலனை நிர்ணயிப்பது. ஆனால், 10% பலனை கோள் சாரம் நிறைவு செய்கின்றது. 10% தானே என்று நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது. இதுவும் எலக்சன் பலனைப் போலத்தான். 3000 ஓட்டுக்கள் ஒருவர் வாங்கி தோற்றுப் போவதும் உண்டு, 3001 ஓட்டு வாங்கி ஒரே ஓட்டில் வெற்றி பெறுவதும் உண்டு.

அந்த வெற்றியை நிர்ணயிப்பது 3000 ஓட்டு அல்ல, ஒரு ஓட்டுதான் என்பதால், அந்த ஓட்டு மிகப் பெரிய பங்களிப்பினை வெற்றிக்கோ தோல்விக்கோ ஆற்றுகிறது. சில நேரங்களில் கோள்சார பலன்கள் பிரதான பலன்களோடு இணைந்து வெற்றி தோல்வியை, கஷ்ட நஷ்டங்களை நிர்ணயம் செய்து விடுவதால், அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.ஆனால் இது எல்லா நேரத்திலும் பொருந்துவதில்லை. இப்பொழுது கடகராசியை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு அஷ்டம ராசியில் சனி நுழைந்த உடன் அஷ்டமச்சனி ஆரம்பித்துவிட்டது. இனி அவர்களுக்கு தொல்லை மேல் தொல்லைதான், எடுத்ததெல்லாம் தோல்விதான், கஷ்டம்தான் என்று, எல்லோரும் பலன் எழுதுவார்கள். கடக ராசிக்கு 30 சதவீத பலன் என்று போட்டிருப்பார்கள். ஆனால், கடகராசி ஜாதகங்களை வைத்துக் கொண்டு இந்த அஷ்டமச் சனி எல்லா கடக ராசி ஜாதகங்களுக்கும் என்ன விதமான பாதிப்பைத் தந்தது என்பதைத் துல்லியமாக ஆய்வுசெய்து பார்த்தால், அதிலே பெரும்பாலோருக்கு கோசார பலன்கள் அப்படியே நடந்து இருக்காது.

காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அஷ்டமச் சனி ஒரு பக்கம் கஷ்டத்தை தந்தாலும், பதினோராம் இடத்தில் ரிஷப ராசியில் குரு கடக ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருந்து அவர்களது வெற்றி ராசியையும் பூர்வ புண்ணிய ராசியையும் சப்தம ராசியையும் பார்வையிடுவதால் அந்தந்த ராசிகள் வலுப்பெற்று அஷ்டமச் சனியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், சில நேரங்களில் சனி தர வேண்டிய பலன்களை இல்லாமலும் செய்து விடுகிறது.அதுவும் கடகத்துக்கு பாக்யாதிபதி குரு தசையோ அல்லது குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்த யோகாதிபன் தசையோ நடந்து தசா நாதன் நல்ல நிலையில் இருந்தால், அவர்களுக்கு அஷ்டமச் சனி பெரிய பாதிப்பைத் தராது. பாம்பு கடித்து இருக்கும் என்றாலும்கூட அது தண்ணீர் பாம்பாக இருக்கும். அடுத்து இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

கடகராசிக்கு அஷ்டமச் சனிதான். ஆனால், சனி கும்பத்தில் ஆட்சி பெறுகின்றார். அது அவருடைய சொந்த வீடு. அடுத்து கடகத்துக்கு எட்டுக்கு உரியவன் எட்டிலே மறையும்பொழுது, அது சில நேரங்களில் விபரீதமான யோகங்களைச் செய்வதும் உண்டு. அந்த அடிப்படையில் சில கடகராசி நேயர்கள் எதிர்பாராத வாய்ப்பினைப் பெற்று வாழ்வில் புதிய திருப்பத்தையும் இந்த அஷ்டமச் சனி நடக்கும் போது சந்தித்தார்கள். அதைப் போலவே, மகரராசிக்கும் சனியால் பெரிய கஷ்டங்கள் ஒன்றும் வந்திருக்காது. காரணம், மகரத்துக்கு உரியவர் சனி. இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்றிருக்கின்றார். பஞ்சம ஸ்தானத்தில் குரு இருந்து மகர ராசியைப் பார்வையிடுகின்றார். ஏழரைச் சனி என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும்கூட, மூன்றாம் இடத்தில் இன்னொரு பெரும் கிரகமான ராகு அமர்ந்து அவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகின்ற அமைப்பும் இருக்கின்றது.

இந்த கலவைப் பலங்களைத்தான் நாம் ராசிபலன்கள் எப்படி பார்க்கப்பட வேண்டும் என்பதில் குறிப்பிட்டு இருக்கின்றோம். அஷ்டமச் சனியின் பலன்களை மற்ற கிரகங்கள் அதிகரிக்க செய்யலாம் அல்லது அத்தனையும் சேர்ந்து அஷ்டமச் சனியின் பலனை நடக்கவிடாமல் தடுத்து விடலாம். யார் ஒருவருக்கும் நவகிரகங்களும் ஒரே அடியாக தீமை செய்யும் அமைப்பில் இருப்பதில்லை. அப்படி இருப்பதற்கு வழியும் இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். எது நன்மை என்று கருதுகின்றோமோ அது சமயத்தில் தீமையான பலன்களைத் தந்து விடுவதும் உண்டு. எது நமக்கு மிகுந்த கஷ்டத்தைத் தரும் என்று நினைக்கிறோமோ, அது ஓரளவு கஷ்டத்தை தந்து, வாழ்வின் திருப்புமுனைகளை ஏற்படுத்தி விடுவதும் உண்டு என்பதையும் கவனத்தில் கொண்டால், எந்த கிரகப் பெயர்ச்சிப் பலன்களையும் பார்த்து அச்சப்பட வேண்டியதில்லை.

 

The post சனி பெயர்ச்சியா? குரு பெயர்ச்சியா? எந்த கிரக பெயர்ச்சிக்கும் பயம் வேண்டாம்! appeared first on Dinakaran.

Tags : Saturn ,Guru Beerschia ,Adiene ,Ashtamach ,Sabbath ,Ashtamach Sani ,Guru ,Beerschia ,
× RELATED நவகிரக தோஷங்களை போக்கும் சூரியனார் கோயில்