
*3 பேர் கைது – கியூ பிரிவு போலீசார் அதிரடி
தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விரளி மஞ்சள், வெளிநாட்டு சிகரெட்கள், பீடி இலைகள் உள்ளிட்டவை கடத்தப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் கடற்கரை வழியாக பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு டிஎஸ்பி பொன்னம்பலத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில் தாளமுத்து வெள்ளப்பட்டி கடற்கரையில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் எஸ்ஐ ஜீவமணி தர்மராஜ், எஸ்எஸ்ஐ ராமர், தலைமை காவலர் இருதயராஜ், குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இலங்கைக்கு படகுகள் மூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட தலா 30 கிலோ எடை கொண்ட 68 மூட்டைகளில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 டன் பீடி இலைகளை கைப்பற்றினர். இது தொடர்பாக பீடி இலை கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி சிலுவை பட்டி கணபதி நகர் தங்கசாமி மகன் மகேஷ் குமார் (28), தாளமுத்து நகர் எம்ஜிஆர் நகர் ஆண்டனி ஜோசப் (40), தங்கசாமி மகன் மாயாண்டி (38) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் பயன்படுத்திய இரு லோடு வேன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட இலை, வாகனங்கள் மற்றும் 3 பேரையும் கியூ பிரிவு போலீசார் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
The post தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலை பறிமுதல் appeared first on Dinakaran.
