சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி ஆதி கொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கொடுத்த கள்ளக்காதலி உள்பட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் காவலர்கள் உள்பட 4 போலீசாரை சஸ்பெண்ட் செய்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஆவடி ஏரிக்கரை தாழம்பூ தெருவை சேர்ந்த சுசித்ரா (21) கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த மாதம் 18ம் தேதி குழந்தை பிறந்தது. சற்று பலவீனமாக குழந்தை இருந்ததால் தாய் சுசித்ரா மற்றும் குழந்தைக்கு மருத்துவமனை வளாகத்திலேயே 25 நாட்கள் தொடர் சிசிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சிகிச்சை பலன் இல்லாமல் குழந்தை கடந்த 11ம் தேதி இறந்தது. இதனால் சுசித்ராவின் முன்னாள் பள்ளி தோழனும், கள்ளக்காதலனான கொளத்தூர் மகாத்மா காந்தி நகர் 4வது தெருவை சேர்ந்த ஆதி (எ) ஆதிகேசவனுக்கு (20) சுசித்ரா, குழந்தை இறப்பு குறித்து தகவல் அளித்தார்.
அதன்படி ஆதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தை இறப்பு குறித்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் தகராறில் ஈடுபட்ட ஆதி மற்றும் சுசித்ராவின் உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சுசித்ரா, அவருக்கு உதவியாக இருந்த வில்லிவாக்கம் பொன்னாங்கிணறு தெருவை சேர்ந்த சாருமதி (23) மற்றும் ரவுடி ஆதி ஆகியோர் மருத்துவமனை வளாகத்திலேயே மது அருந்திவிட்டு ஒன்றாக தூங்கியுள்ளனர்.
அப்போது கும்பல் ஒன்று மருத்துவமனைக்குள் புகுந்து மது போதையில் இருந்த ஆதியை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ரவுடி ஆதியை அவரது கள்ளக்காதலி சுசித்ரா இறந்த தனது குழந்தைக்கு நியாயம் கேட்க வரவழைத்ததும், பிறகு ஆதி மருத்துவமனைக்கு வந்த தகவலை சுசித்ரா தனது தோழியான சாருமதி மூலம் ஆதியின் நண்பர்களுக்கு தகவல் அளித்ததும் தெரியவந்தது.
மேலும் கொலை நடந்த இடத்தை சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் நேரில் சென்று ஆய்வு செய்து, குற்றவாளிகளை படிக்க 9 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் உயிரிழந்த ஆதியின் கள்ளக்காதலி சுசித்ரா மற்றும் சாருமதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, ராஜமங்கலம் காவல் எல்லையில் கடந்த 2022ம் ஆண்டு ரவுடி பழனி என்பவரை ஆதி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொன்றது தெரியவந்தது.
அதற்கு பழிவாங்கும் நோக்கில், பழனியின் ஆதரவாளர்கள் ஆதியை கொலை செய்ய திட்டம் தீட்டி ஆதி 2 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வந்த போது, ஆதியின் கள்ளக்காதலி மற்றும் சாருமதி உதவியுடன் வெட்டி கொன்றது தெரியவந்தது. முன்னதாக, கொலையான ஆதி டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு மருத்துவமனையில் இருந்து புறப்பட முயன்றார். அப்போது, சாருமதி மற்றும் கள்ளக்காதலியான சுசித்ரா பழனி ஆதரவாளர்கள் கூறியபடி ஆதிக்கு மதுபானம் கொடுத்து தங்களுடன் தங்க வைத்துள்ளனர்.
ஆதியும் போதையில் நிதானம் தெரியாமல் அவர்களுடன் தூங்கி உள்ளார். அதன் பிறகு சாருமதி மீண்டும் அளித்த தகவலின்படி ஆதியை வெட்டி கொலை செய்துவிட்டு சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து தனிப்படையினர் ஆதியின் கள்ளக்காதலி சுசித்ரா, சாருமதியை கைது செய்தனர். மேலும், அவர்கள் அளித்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான வனக்குமார் (21), கார்த்திக் ராஜா (20), ஸ்ரீராம் (22), ஜெயபிரதாப் (20), சூர்யா (19), அலிபாய் (21), அருண்குமார் (22) ஆகியோரை அடுத்தடுத்து கைது செய்தனர்.
அதன்படி மொத்தம் கள்ளக்காதலி உள்பட 9 பேரை போலீசார் குற்றம் நடந்த 12 மணி நேரத்தில் கைது செய்தனர். தனிப்படையினர், வனக்குமார் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோரை பிடிக்க முயன்ற போது, இருவரும் கால் தடுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை தனிப்படையினர் மருத்துவமனையில் அனுமதித்து மாவுக்கட்டு போட்டனர். பின்னர் கொலையாளிகளிடம் இருந்து 4 பட்டாக்கத்திகள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே போலீஸ் கமிஷனர் அருண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குற்றம் நடந்த அன்று இரவு பணியில் கவனக்குறைவாக இருந்த முதல் நிலை காவலர் நரேந்திரன் மற்றும் பெண் காவலர்களான சரிதா, அம்பிகா, நீலாவதி ஆகிய 4 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதோடு இல்லாமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முறையாக கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொள்ள தவறியதாக கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் துரை மற்றும் கொலை நடந்த அன்று பொறுப்பு அதிகாரியாக இருந்த கீழ்ப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
