ஓமலூர், மார்ச் 10: சேலம் மாவட்டம் ஓமலூர் வனத்தில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சி விற்பனையில் ஈடுபடுவதாக சேலம் தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், தொப்பூர் வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், ஓமலூர் அருகே பொட்டியபுரம் கீழ்தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சுப்ரமணி(23) என்பவர் மான் மற்றும் காட்டுப்பன்றி, காட்டு மாடுகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை கிலோ ₹2 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்வதாக தெரியவந்தது.
இதையடுத்து, சுப்ரமணியை பொறி வைத்து பிடித்த வனத்துறையினர், அவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, பால்ரஸ் குண்டுகள், தோட்டாக்கள், கண்ணி வலைகள் மற்றும் மான், பன்றி இறைச்சிகளை கைப்பற்றினர். மேலும், இறைச்சி விற்பனை செய்து வைத்திருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணியை கைது செய்து வனப்பகுதி அழைத்து சென்றும், சேலம் வன அலுவலகத்தில் வைத்தும் விசாரனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், காமலாபுரத்தை சேர்ந்த 2 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
The post மான் வேட்டையாடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.
