×

புதுகை அருகே கோர விபத்து 2 கார்கள், வேன் மோதல் தம்பதி உள்பட 4 பேர் பலி: 3 பேர் படுகாயம்

திருமயம்: புதுக்கோட்டை அருகே நேற்று 2 கார்கள், மினி வேன் மோதிக்கொண்டதில் தம்பதி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தஞ்சை காவேரி நகரை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (65). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி அருணா (60). மகன் அருண்குமார் (45). சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (42). இவர்களது குழந்தைகள் குழலினி (6), மகிழினி (4). செந்தமிழ்ச்செல்வன் நேற்று காலை மனைவி, மருமகள் மற்றும் 2 பேத்திகளுடன் மதுரையில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு காரில் சென்றார்.

காரை செந்தமிழ்ச்செல்வன் ஓட்டி சென்றார். காலை 9.50 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நமணசமுத்திரம் காவல்நிலையம் அருகே திருச்சி-காரைக்குடி பைபாஸ் சாலையில் சென்றபோது, எதிரே காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு மூர்த்தி என்பவர் ஓட்டி வந்த மினி வேன் மீது கார் மோதியது. மேலும் வேன் பின்னால் வந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இதில் கார், மினி வேன் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் வந்த செந்தமிழ் செல்வன், அருணா, மினிவேனில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் விளாம்பட்டியை சேர்ந்த சுதாகர் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரம்யா, 2 குழந்தைகள், மினி வேன் டிரைவர் மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தார். 2 குழந்தைகள், மினி வேன் டிரைவர் மூர்த்தி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

* கல்லூரி பஸ் மீது கார் மோதி விவசாயி உடல் நசுங்கி பலி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பொலவக்காளிபாளையம் தெக்கலூரை சேர்ந்தவர் கண்ணுச்சாமி (எ) கோவிந்தராஜ் (56). விவசாயி. மகளை பார்க்க வந்த மாமனார் முத்துசாமியை சித்தோடு அருகே உள்ள செம்பூத்தாம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு கண்ணுச்சாமி நேற்று காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, தாசம்பாளையம் என்ற இடத்தில் சாலையோரம் நின்றிருந்த தனியார் கல்லூரி பேருந்தின் பின்புறம் கார் பயங்கரமாக மோதி உள்ளே புகுந்து நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி கண்ணுச்சாமி உயிரிழந்தார். இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நொறுங்கிய காரிலிருந்து சடலம் மீட்கப்பட்டது. இதனால், கோபி-ஈரோடு சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post புதுகை அருகே கோர விபத்து 2 கார்கள், வேன் மோதல் தம்பதி உள்பட 4 பேர் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Thirumayam ,Senthamilchelvan ,Thanjavur Kaveri Nagar ,Aruna ,
× RELATED திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி...