×

சுசீந்திரம் அருகே துணிகரம் குடோனை உடைத்து 23 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு

*வாகனத்தில் ஏற்றி தப்பிய கொள்ளையர்கள்

சுசீந்திரம் : குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் மீனாட்சிநகர் பகுதியில் தனியார் கேஸ் குடோன் உள்ளது. இந்த குடோனில் ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ண பிள்ளை (44) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த குடோனில் ஏராளமான கேஸ் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் இரவு கிருஷ்ண பிள்ளை வழக்கம்போல குடோனை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதையறிந்த மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் குடோன் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த 23 கேஸ் சிலிண்டர்களை வெளியே எடுத்துவந்தனர். பின்னர் தயாராக இருந்த வாகனத்தில் ஏற்றி மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் குடோனில் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அவர்கள் உடனே குடோன் மேலாளர் கிருஷ்ண பிள்ளைக்கு தகவல் அளித்தனர்.

அவரும் உடனே அங்கு வந்தார்.அவர் கணக்கிட்ட போது, குடோனில் 14 கிலோ எடையுள்ள 22 கேஸ் சிலிண்டர்கள், 10 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டர் என மொத்தம் 23 சிலிண்டர்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதில் அனைத்திலும் எரிவாயு நிரப்பப்பட்டு இருந்தது. இது குறித்து சுசீந்திரம் போலீசாரும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த குடோனில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. எனவே அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கேஸ் சிலிண்டர்களுடன் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் வாகனம் செல்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் மர்ம நபர்களை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.இந்த குடோன் நான்கு வழிசாலை அருகில் உள்ளது. அப்பகுதியில் உள்ள புதர்களை அடிக்கடி தீ வைத்து விடுகின்றனர். இந்த தீ கியாஸ் குடோனுக்கு பரவினால் பெரும் ஆபத்து ஏற்படும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

The post சுசீந்திரம் அருகே துணிகரம் குடோனை உடைத்து 23 கேஸ் சிலிண்டர்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Venture ,Kudon ,Susindram ,Terur Meenatsinagar ,Kumari District Susindram ,Krishna Pillai ,Isanthimangalam ,Dinakaran ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...