×

சி.வி.சண்முகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

திண்டிவனம், மார்ச் 8: விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் களம் காண்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு தகுந்தாற்போல் மயிலம் தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள மயிலம் தொகுதிக்குட்பட்ட வைரபுரம் கிராமத்தில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சி.வி.சண்முகம் மேடையிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக ஓரிரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்ற நிலையில் அம்மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிளைச் செயலாளர் பெருமாள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தனது மனைவி பெயரை அழைக்கவில்லை என்றும், தங்களின் கிராமத்தில் யாருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என்றும் பெருமாள் கூச்சலிடவே கட்சியினர் அவரை சமாதானப்படுத்தினர். அப்போது அவர் அழைத்து வந்த பொதுமக்களும் தொடர்ந்து கூச்சலிட்டனர்.

இதனால் கடுப்பான சி.வி.சண்முகம் மேடையில் இருந்து இறங்கி சென்றார். அப்போது அவரை முற்றுகையிட்டு அம்மணபாக்கம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அம்மணபாக்கத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அழைக்கப்பட்டனர். அப்போது கிளைச் செயலாளர் அதற்கு சம்மதிக்காததால் குழப்பம் ஏற்பட்டது. இதேபோல் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர் தலைமையில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளின்போதும் சலசலப்பு ஏற்பட்டது.

The post சி.வி.சண்முகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : C.V. Shanmugam ,Tindivanam ,minister ,Mayilam ,Villupuram district ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு