×

காங். எம்பி மனைவிக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இந்தியாவின் உள்விவகாரங்களில் ஐஎஸ்ஐ பங்கை விசாரிக்க இன்டர்போல் உதவியை நாட முடிவு: அசாம் அரசு தகவல்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தை சேர்ந்த கவுரவ் கோகாய் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். கோகயின் மனைவி எலிசபெத் கோல்பர்ன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். கோகாயின் மனைவிக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஐஎஸ்ஐ தொடர்புகள், மூளைச்சலவை மற்றும் தீவிரவாத செயல்களுக்காக இளைஞர்களை பாகிஸ்தான் தூதகரத்துக்கு அழைத்து சென்றது, கவுரவ் கோகாயின் மனைவி கடந்த 12 ஆண்டுகளாக இந்திய குடியுரிமையை பெற மறுப்பது போன்ற குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.

கோகாய் மனைவிக்கு பாகிஸ்தானுடனான தொடர்பு விவகாரத்தில் அசாம் அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும்” என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியாவின் உள்விவகாரங்களில் ஐஎஸ்ஐ அமைப்பின் தொடர்பு பற்றி விசாரிக்க இன்டர்போல் உதவியை நாட அசாம் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கவுகாத்தியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது.

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரும், அந்நாட்டின் திட்டக்குழு முன்னாள் ஆலோசகரும், கோகாயின் மனைவி எலிசபெத் கோல்பர்னின் சக ஊழியருமான அலி தவ்ஹீர் ஷேக் மீது ஏற்கனவே உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலி தவ்ஹீர் ஷேக் சுமார் 20 முறை இந்தியாவுக்கு வந்து, அசாம் மாநிலம் பற்றி ட்விட்டரில் கருத்துகள் பதிவிட்டிருந்தார். அசாம் மக்களுடனும் தொடர்பில் இருந்தார். நாங்கள் ஒரு அசாம் பெண்ணின் பெயரை கண்டுபிடித்துள்ளோம். இதுஒரு தனிநபர் பற்றிய விவகாரம் கிடையாது.

ஆனால் இந்தியாவில் ஐஎஸ்ஐ அல்லது பாகிஸ்தான் அரசாங்கத்தின் செல்வாக்கு இருப்பது தெரிகிறது. எனவே இந்த விவகாரத்தில் அலி தவ்ஹீர் ஷேக் மீதான குற்றச்சாட்டு பற்றி விசாரிக்க அசாம் காவல்துறை கடந்த 17ம் தேதி சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்துள்ளது. அதன் ஆரம்பக்கட்ட விசாரணையின் முன்னேற்றங்கள் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறப்பு புலனாய்வுக்குழு ஒரு எல்லை வரை மட்டுமே விசாரணை நடத்த முடியும். எனவே இந்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

The post காங். எம்பி மனைவிக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இந்தியாவின் உள்விவகாரங்களில் ஐஎஸ்ஐ பங்கை விசாரிக்க இன்டர்போல் உதவியை நாட முடிவு: அசாம் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Pakistan ,Interpol ,ISI ,India ,Assam government ,Guwahati ,Gaurav Gogoi ,Assam ,Deputy Leader ,Lok ,Sabha ,Gogoi ,Elizabeth Colburn ,England ,BJP ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...