* அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு
* தனிப்படை போலீஸ் தீவிரம்
சென்னை: அம்பத்தூர் வாலிபர் கொலையில் நெல்லையைச் சேர்ந்த கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (60). இவரது மகன் தினேஷ் பாபு (35). பேட்மிண்டன் பயிற்சியாளராக உள்ள இவர் கட்டிட காண்ட்ராக்ட் வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள பேட்மிண்டன் மையத்திற்கு தினேஷ் பாபு காலை, மாலை பயிற்சிக்கு வருவது வழக்கம். அதன்படி கடந்த 28ம் தேதி மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு அவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து கையில் வைத்திருந்த அரிவாளால் தினேஷ்பாபுவின் முகம் மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் பாபு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தினேஷ் பாபு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கில் நாங்கள்தான் குற்றவாளிகள் என்று 2 பேர் சரணடைந்தனர். அவர்கள் சில நாட்களுக்கு முன்னர், தங்களுக்கும் தினேஷ்பாபுவுக்கும், வாகனம் ஓட்டும்போது மோதிக் கொண்டதில் தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை நாங்கள் அடித்து விட்டோம். எங்களை கொலை செய்வோம் என்று மிரட்டியதால், அவரை நாங்கள் கொலை செய்தோம் என்றனர். ஆனால் கொலை நடந்த இடத்தில் ஆட்டோவில் வந்து கொலையை செய்த கும்பல், இவர்கள் இல்லை என்று தெரிந்தது. இதனால் வக்கீல்கள் மூலம் போலி குற்றவாளிகள் சரண் அடைந்தது தெரியவந்தது. இதனால், தொடர்ந்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளின் வீடியோவை வைத்து விசாரித்தபோது, நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைக்கு தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது.
இதனால் கொலையில் நேரடியாக ஈடுபட்ட திருநெல்வேலி வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜவேலு (31), பாளையங்கோட்டை செட்டிகுளத்தைச் சேர்ந்த யேசுராஜா (43), நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (42), கும்பகோணத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21), திருவள்ளூர் திருவேலங்காடு பகுதியைச் சேர்ந்த முகமது சுபீர் (21) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
ராஜவேலு மீது கொலை வழக்குகள் உள்பட 22 வழக்குகள் உள்ளன. யேசுராஜா மீதும் கொலை வழக்கு உள்பட 18க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரும் சேர்ந்து கூலிப்படையாக செயல்பட்டுள்ளனர். நெல்லை, தாழையூத்து ஆகிய இடங்களில் சாதி மோதல் தொடர்பான கொலைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அவர்கள் சென்னைக்கு தப்பி வந்தனர். நெல்லையைச் சேர்ந்த பெருமாள் அம்பத்தூரில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். அந்தக் கடையில் மாலையில்தான் இந்தக் கும்பல் ஒன்றுகூட ஆரம்பித்துள்ளது. பகலில் ஆட்டோ ஓட்டுவது, மாலையில் கூலிப்படையாக செயல்பட திட்டம் தீட்டுவது என்று இருந்துள்ளனர்.
பெருமாள் மீது பூந்தமல்லியில் கொலை வழக்கு உள்ளன. பெருமாளின் நண்பர், தனஞ்செயன். அதிமுக பிரமுகர். இவரது நண்பரின் மகளை தினேஷ் பாபு, காதலித்து வந்துள்ளார். இது தெரிந்ததும், அவரது பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். ஆனால் தினேஷ் பாபு மீது உள்ள காதலால், அவர் ஓராண்டுக்கு முன்பு திரும்பி வந்து விட்டார். பின்னர் மீண்டும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதனால் பெண்ணின் உறவினர்கள் சேர்ந்து தனஞ்செயனிடம் கூறியுள்ளனர். அவர்தான் பெருமாள் என்பவர் மூலம் நெல்லையைச் சேர்ந்த கூலிப்படைக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் பேரம் பேசி கொலையை முடித்துள்ளார். அதில் மணிகண்டன், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அரக்கோணத்தில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்து ஆட்டோ ஓட்டி வந்தார். அவருக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் தருவதாக கூலிப்படையினர் கூறியவுடன், கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொலையில் அதிமுக பிரமுகர் தனஞ்செயனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட பின்னரே பெண்ணின் உறவினர்களுக்கு உள்ள தொடர்பு தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதனால் தனிப்படை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
The post அம்பத்தூர் பேட்மிண்டன் பயிற்சியாளர் கொலையில் திருப்பம் நெல்லை கூலிப்படையினர் கைது: தலா ரூ.3 லட்சத்துக்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.
