×

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்ட பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்க திட்டம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வரும் அரசு பேருந்துகள் இனி, கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படும் என அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது.

இதனால் கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ேபருந்துகள் தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்களும் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மீண்டும் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பஸ்கள் இனி தாம்பரத்துக்கு பதிலாக கிளாம்பாக்கம் வரையே இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:சென்னை தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறை வழங்கியுள்ள பரிந்துரையின்படி, தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் அனைத்தும் நாளை முதல் சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள் 3795 பயணநடைகள் இயக்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக 104 பேருந்துகள் 816 பயணநடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்ட பஸ்கள் இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்க திட்டம்: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern District ,Glampakkam ,Tambaram ,Transport Department ,Chennai ,Klampakkam ,State Transport Department ,Southern ,District ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...