×

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட புதிய டெக்னிக்: குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு

திருப்பூர்: அதிமுகவின் முன்னாள் முதல்வரும் , பொதுச்செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக பிளவுபட்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி தற்போது பெரும்பான்மையாக இருந்தாலும் கூட அந்த அணியிலும் தற்போது கோஷ்டி பூசல்கள் வெளிப்படையாகவே தெரிய துவங்கியுள்ளது. கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சட்டமன்ற , நாடாளுமன்ற , உள்ளாட்சித் தேர்தல்களிலும் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி பெரும்தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் கொங்கு மண்டலத்திலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டது. கடந்த மாதம் விவசாயிகள் சார்பில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கான பாராட்டு விழாவில் அது வெளிப்படையாக தெரியவந்தது. இந்த நிகழ்வு குறித்து அதிமுகவின் மூத்த நிர்வாகியும் , முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதற்குப் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 77 வந்து பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் , பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வருகின்ற 5ஆம் தேதி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனைப் பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெயக்குமார் தனது சமூக வலைதள பக்கங்களிலும் அந்த போஸ்டரை பகிர்ந்து வருகிறார். அந்த போஸ்டரில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும் , தற்போதைய அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் , முன்னாள் அமைச்சர்கள் கே சி கருப்பண்ணன் , தாமோதரன் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஈரோடு மாவட்டத்தின் மூத்த நிர்வாகியும் , முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பெயர் இடம் பெறவில்லை. செங்கோட்டையன் அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக மட்டுமல்லாது , கட்சியின் அமைப்பு செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது பெயர் இடம்பெறாதது அதிமுகவினரிடைய லோக்கல் உட்கட்சி பூசலை வெளிப்படையாக காட்டத் தொடங்கியுள்ளது.

இதேபோல் அதிருப்தி அணிகள் உருவாகி இருப்பதன் காரணமாக அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு சமீப காலங்களில் கூட்டம் கூடுவது குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊத்துக்குளி டவுன் பகுதியில் நடைபெற உள்ள செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை திரட்டுவதற்காக அதிமுகவினர் புதிய டெக்னிக் ஒன்றை துவங்கி உள்ளனர். பொதுக் கூட்டத்திற்கு அடிக்கப்பட்ட நோட்டீஸில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு என விளம்பரம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு ஆள் கிடைக்காமல் குழுக்கள் முறையில் பரிசு விநியோகம் செய்வதாக கூறி ஆட்களை திரட்டுவது அரசியல் விமர்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

The post அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட புதிய டெக்னிக்: குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,J Jayalalitha ,general secretary ,Supreme Court ,Edappadi Palanichami ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்